×

வைகை அணையில் நீர்மட்டம் சரிவு 58 கிராம கால்வாயில் நீர் திறப்பு நிறுத்தம்

ஆண்டிபட்டி, பிப். 21: வைகை அணையின் நீர்மட்டம் 67 அடியாக குறைந்ததால், 58 கிராம கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் தொடர் மழையால், ஆண்டிப்பட்டி அருகே, 71 அடி உயரமுள்ள வைகை அணை கடந்த மாதம், தனது முழுக்கொள்ளளவை எட்டியது. நீர்மட்டம் 67 அடியை தாண்டினால், திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா பகுதிகளுக்கு பாசனத்திற்காக 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறப்பர். கடந்த மாதம் அணை முழுக்கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து 58ம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது.

இது தவிர பெரியாறு பாசனக் கால்வாயிலும், வைகை ஆற்றிலும் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், நீர்வரத்து குறைந்ததால், ஒரு மாதமாக முழுக்கொள்ளளவில் இருந்த வைகை அணை நீர்மட்டம் குறையத் தொடங்கியது. கடந்த 2 வாரமாக குறைந்து வந்த வைகை அணை நீர்மட்டம் நேற்று காலை 67.29 அடியாக குறைந்தது. இதையடுத்து நேற்று முதல் 58ம் கால்வாயில் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. கடந்த ஜன.16 முதல் நேற்று காலை வரை 58 கிராம கால்வாயில் சுமார் 315 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் 58 கிராம கால்வாய் மூலம் 33 கண்மாய்களில் ஓரளவு மட்டுமே தண்ணீர் தேக்க முடிந்ததாக உசிலம்பட்டி பகுதி விவசாயிகள் தெரிவித்தனர். கடந்தாண்டை ஒப்பிடும்போது இந்தாண்டு 58 கிராம கால்வாயில் அதிக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Vaigai dam ,
× RELATED கடும் வெயிலால் வைகை அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைவு