மஞ்சளாறு அணையில் இருந்து வறட்சி பகுதிக்கு வாய்க்கால் அமைக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

தேவதானப்பட்டி, பிப். 21: தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணையில் இருந்து வறட்சி பகுதிகளுக்கு, புதிய வாய்க்கால் அமைக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேவதானப்பட்டி அருகே, மேற்கு தொடர்ச்சிமலை கொடைக்கானல் அடிவாரத்தில் 57 அடி உயரம் கொண்ட மஞ்சளாறு அணை அமைந்துள்ளது. இதன் மூலம் தேனி மாவட்டத்தில் 3148 ஏக்கரும், திண்டுக்கல் மாவட்டத்தில் 2111 ஏக்கரும் பாசன வசதி பெற்று வருகிறது. அணையில் இருந்து மழை காலங்களில் அதிக தண்ணீர் வரும் போது திறந்துவிடப்படும் தண்ணீர் வீணாக ஆற்றில் கலக்கிறது. இது குறித்து சில்வார்பட்டி விவசாயிகள் நலச்சங்க பொறுப்பாளர் முத்துக்காமாட்சி கூறுகையில், ‘தேவதானப்பட்டியில் இருந்து 3 கி.மீ சுற்று வட்டாரத்தில் உள்ள டி.வாடிப்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி, கதிரப்பன்பட்டி, சில்வார்பட்டியில் சுமார் 1000 ஏக்கர் மானாவாரி நிலங்களாக தரிசாக உள்ளது. அணையின் மூலம் டி.வாடிப்பட்டி மற்றும் எருமலைநாயக்கன்பட்டியில் ஆயக்கட்டு பாசன வசதி உள்ளது. ஆனால், பருவமழை தாமதம், தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் இந்த இடங்களில் நெல் சாகுபடி நடைபெறுவதில்லை. பெரும்பாலான இடங்களில் மானாவாரி சாகுபடி செய்யப்படுகிறது.  ஆகையால் டி.வாடிப்பட்டி வரை வரும் வாய்க்காலில் இருந்து கதிரப்பன்பட்டி வழியாக சில்வார்பட்டிக்கு புதிய வாய்க்கால் அமைக்க வேண்டும். அந்த வாய்க்காலில் இருந்து வெளியேறும் உபரிநீரை சில்வார்பட்டி பெரிய ஓடையில் இணைத்துவிட்டால் அதிலிருந்து ஜெயமங்கலம் வேட்டுவன்குளம் கண்மாயில் சேரும். எனவே மாவட்ட நிர்வாகம் மஞ்சளாறு அணையில் இருந்து வீணாக ஆற்றில் கலக்கும் தண்ணீரை சில்வார்பட்டி பகுதிக்கு புதிய வாய்க்கால் அமைத்து ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்களை சாகுபடி நிலங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories:

>