×

திருப்புத்தூர் உழவர் சந்தையில் குரங்குகள் அட்டகாசம்

திருப்புத்தூர், பிப். 21: திருப்புத்தூரில் உள்ள உழவர் சந்தை கடைகளில் காய்கறிகள் மற்றும் பழங்களை குரங்குகள் எடுத்துச் சென்று அட்டகாசம் செய்வதால் வியாபாரிகள் புலம்பி வருகின்றனர். இங்கு திரியும் குரங்குகளை வனத்துறையினர் பிடிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர். திருப்புத்தூர் காந்தி சிலை அருகே  உழவர்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 15க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை  கடைகளில் காய்கறி விற்பனை நடைபெற்று வருகிறது. வெளியிலுள்ள மற்ற காய்கறி கடைகளை விட இங்கு விலை சிறிது குறைவாக விற்கப்படுகிறது. இதனால் திருப்புத்தூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமத்தினர் தினந்தோறும் ஏராளமானவர்கள் இங்கு வந்து காய்கறிகள் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் உழவர் சந்தை வளாகத்தில் உள்ள ஆலமரத்திற்கு சுமார் 20க்கும் மேற்பட்ட குரங்குகள் தினந்தோறும் வந்து செல்கின்றன. இவை கடைகளில் உள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை தூக்கிச் செல்கின்றன. விரட்டினால் கடிக்க வருவதுபோன்று பயமுறுத்துகின்றன. இதனால் காய்கறி வியாபாரிகள் புலம்பி வருவதோடு அச்சத்தில் உள்ளனர். எனவே, இங்கு திரியும் குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து வேறு இடத்தில் விட வேண்டுமென காய்கறி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Tiruputhur Farmers Market ,
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு