நன்றி குங்குமம் டாக்டர்
சிறுபஞ்ச மூலம் நாற்பது எனும் சங்ககால நீதி நூல் சிறப்பு நிலை குழந்தைகள் இச்சமுதாயத்தால் பாதுகாக்கப்பட வேண்டிய சமூக அங்கத்தினர் எனக் கூறுகிறது. சங்க காலம் தொட்டு இன்று வரை சிறப்பு நிலை குழந்தைகள் சமுதாயத்தில் உள்ளதால், அவர்களை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு மனிதனின் கடமையாகி உள்ளது. உடலாலும் மனதாலும் நன்றாக இருக்கும் நாம், அவர்களுக்கு உதவ வேண்டும். இலக்கிய சான்றுகளின்படி சங்க காலத்தில் இக்குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், தற்போது அவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
ஆட்டிசம் என்பது ஒரு குறைபாடாக இருந்தாலும், பெற்றோர்களின் சரியான கவனிப்பு மற்றும் பயிற்சியின் மூலம் அவர்களைத் திறமைசாலிகளாக மாற்ற முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தக் குறைபாடு கொண்ட குழந்தைகள் பல சவால்களை சந்தித்தாலும், பெரும்பாலும் ஏதோ ஒரு அதீத திறமையை உடையவர்களாக இருப்பர். அந்தத் திறமையை வெளிக்கொணர்வது சிறந்த பயிற்சியும் பெற்றோர்களின் கவனிப்பும்தான் என, வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாகவே, சிறப்பு குழந்தைகளின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 2 ஆம் தேதியை உலக ஆட்டிசம் நோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்நோய் பாதிப்பு குறித்தும், நோய் காரணங்கள், சிகிச்சைகள் குறித்தும், விளக்குகிறார் மூத்த குழந்தைகள் நல சித்த மருத்துவர் க.இளவரசன்.
நோய் அறிகுறிகள்
பொதுவாக, 1 முதல் 3 வயது குழந்தைகளில் காணப்படும் சில அறிகுறிகளை வைத்து ஆட்டிசம் இருப்பதை அறிய முடியும். கைகளால் சுட்டிக்காட்டுதல், தலையசைத்தல் போன்ற சைகைகள் குறைவாகக் காணப்படும், மழலை மொழி பேசாமை, இயல்புக்கு மாறான சத்தங்களை எழுப்புவது, முன்னர் தெரிந்த சொற்களை மீண்டும் பயன்படுத்தாமல் இருப்பது, மற்றவர்களின் கண்களை நேராகப் பார்க்கவும், பிறர் செய்வதை பின்பற்றுவதிலும் சிரமப்படுவது, தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாதது, பெயர் சொல்லி அழைக்கும் போது பதிலளிக்காதது, சக குழந்தைகளின் கவனத்தை ஈர்ப்பதில் சிரமப்படுவது, குழந்தைகளின் செயல்பாடுகளான விரல்கள், கைகள் அல்லது உடலை இயல்புக்கு மாறாக அசைப்பது, செய்த செயல்களையோ, சொற்களையோ மீண்டும் மீண்டும் செய்வது அல்லது சொல்வது, சிறிய விஷயங்களின் மேல் அதிக கவனம் செலுத்துவது ஆகியவற்றுடன் தினமும் ஒரே வகையான உணவை மட்டுமே சாப்பிட விரும்புவது உள்ளிட்டவை ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கான செயல்பாடுகளாகும். இவற்றையே, ஆட்டிசம் ஏற்படுவதற்கான ‘சிவப்பு கொடி அறிகுறிகள்’ எனக் குறிப்பிடலாம்.
நோய்க்கான காரணங்கள்
நவீன மருத்துவத்தில் ஆட்டிசம் ஏற்படும் துல்லியமான காரணம் இன்னும் உறுதியாக கண்டறியப்படவில்லை. இருப்பினும், மரபியல் காரணிகள் மற்றும் மூளை வளர்ச்சியை பாதிக்கும் பல காரணிகளின் கூட்டுச் செயலால் இது ஏற்படலாம் என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. கர்ப்பிணி தாயின் வயது, கர்ப்ப கால உணவு பழக்கம், உடல் எடை, உடல் மற்றும் மன ஆரோக்கியம், மனஅழுத்தம், எதிர்மறை எண்ணங்கள், தீய பழக்கவழக்கங்கள் போன்றவை குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கக்கூடிய காரணிகளாகக் கருதப்படுகின்றன. இவற்றுடன், சித்த மருத்துவத்தின் அடிப்படையில் வளி, அழல், ஐயம் என்ற மூன்று உடல் தன்மைகளின் (மூன்று தோஷங்களின்) சமநிலையின்மை காரணமாக குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்கள் ஆட்டிசத்திற்குக் காரணமாகக் கருதப்படுகின்றன.
சிகிச்சைகள்
ஆட்டிசம் கொண்ட ஒவ்வொரு குழந்தைகளுக்கும் செயல் சார்ந்த சிகிச்சை, புலன் ஒருங்கிணைப்பு சிகிச்சை, பேச்சு சிகிச்சை, இசை சிகிச்சை, படங்களைப் பரிமாறிக் கொள்ளும் அமைப்பு, ஆரம்பத் தலையீட்டுச் சிகிச்சை, பெற்றோருக்கான பயிற்சி, ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறுக்காக நவீன மருத்துவத்தில் மருந்துகள் மற்றும் நடத்தை சிகிச்சைகள் பயன்படுத்தப்படுகின்றன. அதே சமயம், நம் நாட்டில் பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஒன்றான சித்த மருத்துவத்தின் புற சிகிச்சைகளும் முழுமையான அணுகுமுறையை வழங்குகின்றன.
இதில் உணவு பழக்கங்கள், வாழ்க்கை முறை மாற்றங்கள், மூலிகை சிகிச்சைகள் ஆகியவற்றுடன் தொக்கணம், புகை சிகிச்சை மூலிகை, பொடிதிமிர்த்தல், தப்பளம், நசியம், ஒற்றடம் உள்ளிட்ட சிகிச்சைகளும் அடங்கும். இச்சிகிச்சைகளுக்கெல்லாம் முத்திரை பதிக்கும் சிகிச்சையாகவும், ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் நோயின் பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்கான வரப்பிரசாதமாகவும் இருப்பது சித்த வர்ம சிகிச்சையாகும்.
வர்ம சிகிச்சையின்படி, நாம் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு சித்த வர்ம புள்ளிகளை தாயின் ஆற்றல் வாயிலாக கொடுக்கும்போது, மருத்துவரின் சிகிச்சையும் தாயின் ஆற்றலும் இணைந்து குழந்தையானது நோய் பாதிப்பிலிருந்து விரைவாக மீண்டு வர உதவுகிறது. இச்சிகிச்சை முறையில் பெண்கள் பொட்டு வைக்ககூடிய நெற்றிபுருவச் சந்திப்பு (திலர்தகாலம்) என்ற வர்மபுள்ளியில் மருத்துவரின் வழிகாட்டுதலின்படி அப்புள்ளியை தூண்டினால் பெற்றோர்கள் அழைக்கும்போது குழந்தைகள் திரும்பி பார்க்காமல் இருக்ககூடிய குறிகுண பாதிப்பு விரைவில் குணமாகிறது.
இதுபோல், நோய் பாதிப்புக்குள்ளான குழந்தைகளின் குறி குணங்களுக்கேற்ப சித்த மருத்துவரின் ஆலோசனைகள் பெற்று வர்ம புள்ளிகளை பெற்றோர்கள் இயக்க வேண்டும், அவ்வாறு, இயக்கப்படும் வர்மபுள்ளிகளும் குழந்தைகளின் நோய் பாதிப்பிற்கேற்ப 3 முதல் 5 புள்ளிகள் வரையெனவும் அல்லது அதற்கு மேலும் இருக்கும். இச்சிகிச்சை முறை, நிச்சயம் குழந்தைகளின் செயல்பாட்டில் மாற்றம் கொடுக்கும்.
சித்த மருத்துவத்தில் சிகிச்சைகளுடன் சேர்த்து, சிறப்பு நிலை குழந்தைகளுக்காக நாம் பின்பற்ற வேண்டிய இரண்டு கடமைகளும் உள்ளன. இளம் தம்பதியர்களுக்கு சித்தர்கள், ரிஷிகள், அறிஞர்கள் ஆகியோரின் அறிவுரைகள், காமசூத்திரத்தின் சில குறிப்புகள், முன்னோர்களின் ‘பும்சவனம்’ எனும் செய்முறை பயிற்சிகள் வழங்குவது உள்ளிட்ட அறப்பாடங்களை நடத்துவது அவசியம்.
இரண்டாவது கடமை இன்று நம்மிடையே இயலாமையுடன் உள்ள சிறப்பு நிலை குழந்தைகளின் வாழ்வுக்கு வழிகாட்டுவதுடன், அவர்களின் சிரமங்களை குறைக்க வழி ஏற்படுத்துவதுதான். இவற்றைப் பின்பற்றினாலே 21ம் நூற்றாண்டில் குழந்தைகளை அதிகம் பாதிக்கக்கூடிய நோய்களில் ஒன்றான ஆட்டிசம் நோயை வரும் காலத்தில் மருத்துவ புத்தகங்களில் இருந்து அகற்றலாம்.
தொகுப்பு: ஸ்ரீ தேவி குமரேசன்
