மக்களை பாதிப்பதால் பெட்ரோல்,டீசல் விலை குறைக்க வேண்டும் வர்த்தக சங்கம் வேண்டுகோள்

மதுரை, பிப்.21: இதன் தலைவர் ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வால் தொழில் வணிக துறையினர் மட்டுமல்லாது, பொதுமக்களும் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.  பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி மற்றும் மதிப்புக் கூடுதல் வரியை உடனடியாக குறைக்க வேண்டும். பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டர் ரூ.100ஐ தாண்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்த விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்கள் முதல் அனைத்து பொருட்களின் உற்பத்தி மற்றும் தயாரிப்புகளின் விலைகள் கணிசமாக உயர்ந்து வருகின்றன. மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளின் நலனுக்காக பெட்ரோல் மற்றும் டீசல் மீது செஸ் வரி ரூ.2.50 விதிக்கப்படுவதாகவும் ஆனால் பெட்ரோல், டீசல் விலை உயராது. இந்த செஸ் வரி மத்திய கலால் வரியில் உள்ளடக்கி சரி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் தெரிவித்ததைப்போல, பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்ட 20 நாட்களுக்குள் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.4ம், டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.4.30ம் உயர்த்தப்பட்டிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. உலகிலேயே நம் நாட்டில் தான் பெட்ரோல், டீசல் மீது அதிகபட்சமாக 69 சதவிகித வரிகள் விதிக்கப்பட்டு தொழில் வணிகத் துறையினர் மீதும், பொதுமக்கள் மீதும் சுமத்தப்படுகின்றது. சரக்கு போக்குவரத்து லாரி உரிமையாளர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சரக்கு லாரி கட்டணம் 25 சதவிகிதம் உயர்த்தப்படும் என அறிவித்துள்ளனர். இதனால் சரக்கு லாரி வாடகை கணிசமாக உயரும். காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும். மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்படும் கலால் மற்றும் மதிப்புக் கூட்டு வரியைக் கணிசமாகக் குறைத்து, மிகுந்த நிதி நெருக்கடியில் இருக்கும் தொழில் வணிகத் துறையினரையும் காப்பது அவசியம்’’ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories:

>