×

பழ மார்க்கெட்டில் பார்க்கிங்கில் புதிய கடைகள் கட்டும் டெண்டரை இறுதி செய்யக் கூடாது ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை, பிப்.21: மதுரை பழ மார்க்கெட்டில் புதிய கடைகள் கட்டுவதற்கான டெண்டரை இறுதி செய்யக் கூடாது என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை பழ கமிஷன் வணிகர்கள் சங்க செயலர் கந்தையா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரையில் யானைக்கல் மற்றும் சிம்மக்கல் பகுதிகளில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த பழக்கடைகள் போக்குவரத்து நெரிசல் காரணமாக மாட்டுத்தாவணி பகுதிக்கு மாற்றப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.16 கோடியில் 240 கடைகள் கட்டப்பட்டு அங்கு செயல்படுகிறது. சுமார் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் தினசரி வந்து செல்கின்றன. மிகவும் குறுகலான இடத்தில் வாகனங்கள் வந்து செல்கின்றன.

இந்த இடத்தில், மேலும் 10 கடைகள் கட்ட மாநகராட்சி தரப்பில் டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த இடத்தில் கடைகள் கட்டினால் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும். வியாபாரிகளும், பொதுமக்களும் பாதிக்கப்படுவர். எனவே மாட்டுத்தாவணி பழ மார்க்கெட்டில் வாகன நிறுத்துமிடத்தில் கடைகள் கட்டுவதற்கான டெண்டர் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். அறிவிப்பிற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர் விசாரித்தனர். வக்கீல் தமிழ்மணி ஆஜராகி, புதிய கடைகள் கட்டினால் வாகனங்கள் வந்து செல்ல முடியாது என்றார். இதையடுத்து நீதிபதிகள், புதிய கடைகள் கட்டுவதற்கான டெண்டர் நடத்தலாம். ஆனால், டெண்டரை இறுதி செய்யக்கூடாது என உத்தரவிட்டனர். மேலும், மாநகராட்சி தரப்பில் பதிலளிக்கவும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

Tags : Icord ,Fruit Market ,
× RELATED சென்னை கோயம்பேடு பழ சந்தையில்...