×

சாணார்பட்டி அருகே செங்குறுச்சி கிராமத்தில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கருப்பு கொடி ஏந்தி போராட்டம்

கோபால்பட்டி, பிப். 21: சாணார்பட்டி அருகே, செங்குறுச்சி கிராமத்தில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே, செங்குறுச்சி ஊராட்சியில் மாமரத்துப்பட்டி என்னும் மலைக்கிராமம் உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் மா, புளி, நெல், தென்னை, பூ மற்றும் பயறு வகைகளை சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் கனிமவளத்துறை சார்பில் தனியாருக்கு கல்குவாரி அமைக்க அனுமதி அளித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள், ‘கல்குவாரிகள் அமைத்தால் நிலத்தடி நீர் குறைந்து விவசாயம் பாதிக்கப்படும். குவாரிகளுக்கு வரும் வாகனங்களால், விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும்.

கல்குவாரிகளில் பயன்படுத்தப்படும் வெடிபொருட்களால் நிலங்கள் அதிர்வு அடைவதுடன், அதிலிருந்து வெளிவரும் கருந்துகளால் விளைநிலங்கள் பாதிக்கப்படும். வெடிச்சத்தத்தால் பறவை இனங்களும் அழியும்; படிக்கும் மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவர். கிராம மக்கள் வெளியேறக்கூடிய சூழல் ஏற்படும். எனவே, இந்தப் பகுதியில் கல்குவாரி அமைக்க வழங்கிய உத்தரவை மாவட்ட நிர்வாகம் மறும் கனிமவளத்துறையினர் ரத்து செய்ய வேண்டும் என நேற்று கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். இதில் பள்ளி மாணவ, மாணவியர்களும் கலந்து கொண்டனர். இது குறித்து முத்துலெட்சுமி கூறுகையில், ‘எங்கள் ஊரில் கல்குவாரி அமைத்தால் விவசாயம், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும். நிலத்தடி நீர், சாலை பாதிக்கப்படும். கல்குவாரி அனுமதியை ரத்து செய்ய வேண்டும்’ என்றார்.

Tags : Senguruchi village ,Sanarpatti ,
× RELATED கிணற்றில் தவறி விழுந்த ஜல்லிக்கட்டு காளை மீட்பு