×

யாரைத்தான் நம்புவதோ… என்னால ஆட்சியில் அமர்ந்தவர்களே என்னை கட்சியிலிருந்து நீக்கிட்டாங்க… புலம்பி தள்ளிய சசிகலா

 

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் அகில இந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் சோழவந்தான் தொகுதி வேட்பாளர் பாலமுருகனை ஆதரித்து, நேற்றிரவு அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா பிரசாரம் மேற்கொண்டார். அவர் பேசுகையில், ‘ஜெயலலிதா மறைவுக்கு பின், நான் சிறை செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றியாக வேண்டும் என்பதற்காக, யாரை நம்பி நான் பொறுப்பை ஒப்படைத்து சென்றேனோ, அவர்கள் நான் சிறைக்கு சென்ற 3வது மாதத்திலேயே என்னை கட்சியிலிருந்து நீக்கினர்.

நான்காண்டு சிறைவாசம் முடிந்து வெளியே வந்தபோது, கட்சி கொடியை பயன்படுத்த கூடாது என கட்டளையிட்டனர். மேலும் தமிழக எல்லையான ஓசூர் தாண்டி கட்சி கொடியுடன் நான் வந்தால் என்னை கைது செய்யவும் போலீசாருக்கு அறிவுறுத்தினர். சிறையிலிருந்து வந்தவுடன் ஜெயலலிதாவின் ஆன்மாவிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக அவரது மணிமண்டபம் செல்ல முற்பட்டபோது, திறந்த 2 நாளேயான அதனை பூட்டிவிட்டு பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாக கூறி எனக்கு அனுமதி மறுத்தனர்.

இதையெல்லாம் பொறுத்து கொண்டது, இந்த கட்சி தொண்டர்களையும், மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மட்டுமே’ என்றார். இவ்வாறு நடந்த கதைகளையெல்லாம், ஒட்டுமொத்தமாக புலம்பி தள்ளினார்.

கலைந்து சென்ற மக்கள்…
சசிகலாவின் பிரசார நிகழ்ச்சிக்காக, சோழவந்தான் தொகுதியின் பல்வேறு பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கானோர் வாகனங்களில் அழைத்து வரப்பட்டனர். அவர் வருவதற்கு முன்பாக, வேட்பாளர் வாக்கு கேட்டு கொண்டிருந்தார். அப்போது பிரசாரம் முடிந்ததாக நினைத்து பெண்கள் கலைந்து சென்றனர். அப்போது கட்சி நிர்வாகிகள் ஓடி சென்று ‘சின்னம்மா வந்து கொண்டிருக்கிறார், அவர் வந்தவுடன் போகலாம்’ என கெஞ்சி கூத்தாடி மீண்டும் அழைத்து வந்தனர். ஆனால் அவர்களும் சசிகலா பேச்சை தொடங்கியதும் கலைந்து சென்றதால் சலசலப்பு ஏற்பட்டது.

Tags : Sasikala ,Akhatsi General Secretary ,Sasikala Prasaram ,Chozhavandan ,All India Revolution Leader People's Progress Association ,Madurai district, Madurai district ,Jayalalitha ,
× RELATED திட்டமிட்டு அலைக்கழிக்கும்...