கன்னியம்பாளையம் கிராமத்தில் பாழடைந்து கிடக்கும் துவக்க பள்ளி கட்டிடம்: இடித்து அகற்ற கோரிக்கை

புழல், பிப்.21: கன்னிம்பாளையம் கிராமத்தில் சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சோழவரம் ஒன்றியம் ஞாயிறு ஊராட்சிக்கு உட்பட்ட கன்னியம்பாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. பழமை வாய்ந்த இந்த பள்ளி கட்டிடம் சேதமடைந்தது. இதனையடுத்து, 2008ம் ஆண்டு அப்போதைய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.4.30 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், சேதமடைந்த பழைய கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டுமென ஊராட்சி நிர்வாகமும், பெற்றோர் ஆசிரியர் கழகமும் இணைந்து, பள்ளி கல்வித்துறைக்கு மனுக்கள் அளித்தன.

ஆனால், இதுவரை அந்த மனு மீது எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த பாழடைந்த கட்டிடத்தில் புதர்கள் மண்டி இருப்பதால், பாம்பு, பூரான், தேள் போன்ற  விஷப்பூச்சிகள் அதிகளவில் உள்ளன. நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகள் திறக்கப்படும்போது சேதமடைந்த கட்டிடத்தாலும், விஷப்பூச்சிகளாலும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த பள்ளி கட்டிடத்தை உடனடியாக, இடித்து அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories:

>