நாகர்கோவிலில் தொழிலாளியை எரித்துக்கொன்ற 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

நாகர்கோவில், பிப். 19: நாகர்கோவில் இருளப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயசங்கர். ஓட்டல் தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருளப்பபுரம் பகுதியில் சாலையோரம் படுத்து இருந்தபோது எரித்துகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மதுரை தல்லாகுளம் பகுதியை சேர்ந்த 4 பேரை கோட்டார் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் இருளப்பபுரம் பகுதியில் உள்ள ஒரு பிளாஸ்டிக் குடோனில் வேலை செய்து வந்துள்ளனர். 4 பேரில் ஒருவரின் காதலி சரியாக பேசாத விரக்தியில், சம்பவத்தன்று இரவு இருளப்பபுரம் பகுதியில் உள்ள மின்விளக்குகளை 4 பேரும் சேர்ந்து உடைத்துள்ளனர். அப்போது சாலையோரம் படுத்து இருந்த ஜெயசங்கர் தட்டிக்கேட்கவே அவரை 4 பேரும் சேர்ந்து எரித்துகொலை செய்தனர். கண்காணிப்பு  கேமரா உதவியுடன் போலீசார் 4 பேரையும் கைது செய்தது குறிப்பிடதக்கது. கைது செய்யப்பட்ட மதுரை தல்லாகுளம் இபி காலனி சந்தை  பகுதியை சேர்ந்த பாலாஜி(20) மீது தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் அடிதடி வழக்குகள் உள்ளன. இதுபோல் கைது செய்யப்பட்ட தல்லாகுளம் அண்ணாநகரை சேர்ந்த இலங்கேஸ்வரன் என்ற இளங்கோ(19) மீதும் தல்லாகுளம் போலீஸ்நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய குமரி மாவட்ட எஸ்பி பத்ரிநாராயணன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டார். ஜெய்சங்கர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் 2 ேபரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் நவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Stories:

>