கருங்கல் அருகே கஞ்சா வியாபாரியை பொறிவைத்து பிடித்த போலீசார்

கருங்கல், பிப். 19: கருங்கல் அருகே எஸ்ஐ மோகன அய்யர் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாலிபர் பாக்கெட்டில் கஞ்சா பொட்டலம் வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் தான் கஞ்சா புகைப்பதற்காக பள்ளியாடி குழிவிளை பகுதியை சேர்ந்த ஒருவரிடம் இருந்து கஞ்சா வாங்கி வந்ததாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் பிடிபட்ட வாலிபரின் செல்போனில் இருந்து காஞ்சா வியாபாரியிடம் பேசினர். அப்போது அதிக கஞ்சா தேவைப்படுவதாகவும் அதிக விலை தருவதாகவும் நைசாக பேசினர். கருங்கல் எட்டணி பகுதிக்கு வரும்படியும் அங்கு வைத்து பணத்தை கொடுத்து கஞ்சாவை பெற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தனர்.

அதன்படி கருங்கல் எஸ்ஐ மோகன அய்யர், தனிப்படை எஸ்ஐ டான் போஸ்கோ தலைமையில் மாறுவேடத்தில் போலீசார் அங்கு மறைந்திருந்தனர். குறிப்பிட்ட பகுதியில் கையில் ஒரு பார்சலுடன் வந்த வாலிபரை பிடிக்க முயற்சித்தனர். ஆனால் போலீசாரை தள்ளிவிட்டு வாலிபர் தப்பி ஓடினார். இதில் தனிப்படை போலீஸ்காரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. இருப்பினும் அந்த வாலிபரை போலீசார் துரத்திச்சென்று மடக்கி பிடித்தனர்.  அவரிடம் இருந்த பையில் சோதனை செய்த போது சுமார் இரண்டேகால் கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில் அவர் பள்ளியாடி குழிவிளை பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் பெல்பின் ராஜ் (24) என்பது தெரியவந்தது. போலீசார் பெல்பின் ராஜை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் காயமடைந்த போலீஸ்காரர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

Related Stories:

>