×

திருத்தணி பழைய பேருந்து நிலையம் மூடல்: நகராட்சி ஆணையர் தகவல்

திருத்தணி: திருத்தணியில், பழைய பேருந்து நிலையம் முழுமையாக மூடப்பட்டதால், பயணிகள் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பயணம் செய்ய வேண்டும் என்று நகராட்சி ஆணையர் கன்னியப்பன் தெரிவித்துள்ளார். திருத்தணி நகராட்சி ஆணையர் கன்னியப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை: திருத்தணியில் போக்குவரத்து நெரிசலை தடுக்கவும், பயணிகளுக்கு வசதிகள் ஏற்படுத்தும் வகையில் திருத்தணி-அரக்கோணம் சாலையில் அதிநவீன வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு கடந்த 30ம்தேதி முதல் பேருந்து இயக்கம் தொடங்கியது. இருப்பினும் பல தனியார் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இயங்கி வருவதால், புதிய பேருந்து நிலையம் முழுமையாக பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் அரசு பேருந்துகளுக்கு வருவாய் குறைந்துள்ளதால் போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர், நகராட்சி ஆணையரிடம் புகார் செய்திருந்தார்.

இதையடுத்து, நேற்று முன்தினம் பழைய பேருந்து நிலையத்தை நகராட்சி ஆணையர் கன்னியப்பன் ஆய்வு செய்து, பழைய பேருந்து நிலையத்தை முழுமையாக மூட ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். இனிவரும் காலங்களில் பழைய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இயங்காது என்றும், அனைத்து பேருந்துகளும் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மட்டுமே இயங்கும் என்றும், பயணிகள் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Tags : Thiruthani Old Bus Station ,Thiruthani ,Tirudani ,Municipal Commissioner ,Kanniappan ,Trithani ,
× RELATED பனை தொழிலாளி மீது துப்பாக்கி சூடு