×

வடசேரி கனகமூலம் சந்தையில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்

நாகர்கோவில், பிப். 19: வடசேரி கனகமூலம் சந்தையில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் நேற்று சீல் வைப்பு நடவடிக்கையில் இறங்கினர். அப்போது அவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாகர்கோவில் மாநகராட்சிக்கு சொந்தமான கனகமூலம் சந்தையில் 260 கடைகள் உள்ளன. இந்த கடைகள் குத்தகைக்கு கொடுக்கப்பட்டு வாடகை வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில் 126 கடைகள் வாடகை செலுத்தவில்லை என்று தெரிகிறது. அதன்படி சுமார் ₹90 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ளனர். சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியும் அவர்கள் வாடகையை செலுத்தவில்லை. இதையடுத்து வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளை சீல் வைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். நேற்று காலை நாகர்கோவில் வருவாய்துறை அதிகாரிகள் ஞானப்பா, சுப்பையா, ராபின்சன், சுகாதார ஆய்வாளர் பகவதிபெருமாள் உள்பட ஊழியர்கள் சந்தைக்கு வந்தனர்.

 அப்போது சில கடைக்காரர்கள் வாடகை பாக்கியை செலுத்தினர். இதையடுத்து இதுவரை வாடகையை செலுத்தாத 16 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அங்கு அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வடசேரி இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. கனகமூலம் சந்தையில் உள்ள கடைகளில் அதிகாரிகள் சீல் வைத்து கொண்டு வந்தனர். அப்போது வியாபாரிகள், கொரோனா காலகட்டத்தில் சந்தை பூட்டப்பட்டு இருந்தது. 6 மாதகாலம் வாடகை கொடுக்கவேண்டாம் என நீதிமன்றம் உத்தவில் உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியதாக கூறுகின்றனர். ஆனால் எங்களுக்கு நோட்டீஸ் வழங்கவில்லை. மார்ச் மாதம் வரை வாடகை கட்ட அவகாசம் உள்ளது. மேலும் நாங்கள் வைப்புதொகை, 10 மாதம் வாடகை பணம் செலுத்திதான் கடையை வாடகைக்கு எடுத்துள்ளோம். எங்களுக்கு வாடகை கட்ட உரிய அவகாசம் வழங்கவேண்டும்.

அதுவரை கடைகளுக்கு சீல் வைக்ககூடாது என அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.  இதையடுத்து வாடகை செலுத்தாத 126 கடைகளில் 16 கடைகளுக்கு மட்டுமே மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து விட்டு வந்தனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரி கூறியதாவது: கனகமூலம் சந்தையில் உள்ள 126 கடைகள் ₹90 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ளன. கொரோனா காலகட்டத்தில் வியாபாரிகளின் நலனை கருதி 2 மாதம் வாடகை வாங்க வேண்டாம் என அரசு அரசாணை வெளியிட்டது. மாதத்தின் 5ம் தேதிக்குள் வாடகை செலுத்தியாக வேண்டும். ஆனால் அவர்கள் கூறுவதுபோல் மார்ச் மாதம் வரை அவகாசம் என்பது இல்லை.  வருகிற திங்கள்கிழமைக்குள் வாடகை பாக்கியை செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளோம் என்றார்.

Tags : Merchants ,seal officers ,shops ,
× RELATED வணிகர் சங்கங்களின் பேரமைப்பு...