×

விவசாயிகள் கவலை கும்பபூ அறுவடையில் மகசூல் இழப்பு வைக்கோல் விலையால் சற்று ஆறுதல்

நாகர்கோவில், பிப். 19: குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பபூ என இருபோக நெல்சாகுபடி நடந்து வருகிறது. நெல்சாகுபடி பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை தண்ணீரையும் பருவ மழையையும் நம்பியே உள்ளது. தற்போது கும்பபூ அறுவடை தொடங்கியுள்ளது. மாவட்டத்தில் சுமார் 5500 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி நடந்துள்ளது. சாகுபடி தொடங்கியபோது பருவமழை பெய்ததால், நெல்பயிர்கள் நல்ல முறையில் செழிப்பாக வளர்ந்தது. பின்னர் மாவட்டத்தில் பரவலாக நெல் பயிர்களில் பாக்டீரியா இலைகருகல் நோய் தாக்கல் இருந்தது. இதனால் நெல்மகசூல் குறைந்தது. குமரி மாவட்டத்தில் தற்போது காட்டுப்புதூர், கடுக்கரை பகுதியில் அறுவடை முடிந்துள்ளது. மேலும் தெள்ளாந்தி, தாழக்குடி, பறக்கை உள்பட பல்வேறு பகுதியில் அறுவடை நடந்து வருகிறது. அறுவடை செய்யப்படும் நெல்மணிகளை கொள்முதல் செய்யும் வகையில் நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர்.

அதன்படி திட்டுவிளை, தாழக்குடி, செண்பராமன்புதூர், தேரூர், பறக்கை மற்றும் திங்கள்சந்தை, கிருஷ்ணன்கோவில் ஆகிய இடங்களில் நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. திறக்கப்பட்ட நெல்கொள்முதல் நிலையங்களில் மோட்டாரகம்(பெரிய அரிசி) பொன்மணி, அம்பை 16, திருப்பதிசாரம் ரகங்களுக்கு ஒரு குவிண்டால் a1918க்கும், சன்னரகம்(சிறிய அரிசி) பொன்னி, பாசுமதி போன்ற ரகங்கள் ஒரு குவிண்டாலுக்கு  a1958க்கும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
நெல்லிற்கு நல்ல விலை கிடைத்தும், போதிய மகசூல் இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஆனால் கடந்த கன்னிப்பூ அறுவடையின்போது வைக்கோலுக்கு போதிய விலை கிடைக்கவில்லை. குறிப்பாக ஒரு ஏக்கர் நிலத்தில் கிடைத்த வைக்கோலுக்கு  a4 ஆயிரம் வரை விலை கிடைத்தது. ஆனால் தற்போது கும்பபூ அறுடையின்போது வைக்கோலுக்கு  a5500 வரை கிடைக்கிறது. இதனால் விவசாயிகள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

இது குறித்து விவசாயி செண்பகசேகரபிள்ளை கூறியதாவது: தற்போது நடந்து வரும் கும்பபூ அறுவடையில் போதிய அளவு மகசூல் கிடைக்கவில்லை. ஆனால் அறுவடை செய்யப்பட்ட நெல்கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படுகிறது. இதனால் மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். நெல்கொள்முதல் நிலையங்களில் நல்ல விலை கிடைக்கிறது. ஆனால் மகசூல் குறைவால் எங்களுக்கு கும்பபூவில் நஷ்டம் அடைந்துள்ளோம். இருப்பினும் கடந்த காலத்தை விட தற்போது வைக்கோல் சிறிய அளவு விலை உயர்ந்துள்ளது. இது எங்களுக்கு ஆறுதலை தந்துள்ளது என்றார்.

அறுவடை இயந்திரம் இல்லை
பறக்கை பகுதி வயல்கள் கும்பபூ அறுவடைக்கு தயாராகியுள்ளன. ஆனால் அறுவடை இயந்திரங்கள் அங்கு இல்ைல. இதனால் நெல்அறுவடை செய்ய இயந்திரங்கள் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி அறுவடை இயந்திரங்கள் வரும்போது அதற்கு உண்டான வாடகையை மாவட்ட நிர்வாகம் நிர்ணயம் செய்ய வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...