×

10 ஆண்டுகளாக மூடியே கிடக்கும் மருந்தகம் பச்சப்பெருமாள்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்

துறையூர், பிப். 19: பச்சப்பெருமாள்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். துறையூர் அடுத்த பச்சப்பெருமாள்பட்டி ஊராட்சி, உப்பிலியபுரம் ஒன்றியத்தை சேர்ந்தது. இந்த கிராமத்தை சுற்றி நெட்டவேலம்பட்டி, தங்கநகர், கோம்பை, ஆலத்துடையான்பட்டி, அழகாபுரி, ஆங்கியம், கோனேரிப்பட்டி என பல கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஊராட்சி ஒன்றிய மருந்தகம் செயல்பட்டு வந்தது. ஒன்றிய நிர்வாகம் திறம்பட செயல்படாததால் இந்த மருந்தகம் இழுத்து மூடப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக மூடப்பட்டு கிடக்கிறது. இதுகுறித்து உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை திறக்கப்படவில்லை. இப்பகுதி மக்கள் தங்களுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டால் 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள எரகுடி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்ல வேண்டியுள்ளது. மேலும் பச்சப்பெருமாள்பட்டி ஊராட்சியில் புளியஞ்சோலை சுற்றுலா தளம் உள்ளது. இங்கு வருபவர்கள் விபத்தில் காயமடைந்தாலோ, உடல்நலம் பாதிக்கப்பட்டாலோ 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள துறையூர் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே பச்சப்பெருமாள்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : government ,health center ,Pachapperumalpatti ,
× RELATED வட்டார மருத்துவ அலுவலருக்கு பணி நிறைவு பாராட்டு விழா