×

இன்று நடக்கிறது வெள்ளி கருட வாகனத்தில் நம்பெருமாள் புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்

திருச்சி, பிப். 19: புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி திருச்சியில் சாலை மறியல் போராட்டம் நடத்திய விவசாயிகள் 15 பேர் கைது செய்யப்பட்டனர். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் 70 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு நடத்திய தொடர் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இந்நிலையில் காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2ம் தேதி வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். இதையடுத்து போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் நேற்று பகல் 12 மணி முதல் 4 மணி வரை 4 மணிநேர ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படுவதாக விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவான சம்யுக்தா கிசான் மோர்ச்சா அறிவித்தது. அதன்படி நேற்று பல மாநிலங்களில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது. டெல்லி, பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேசம் மற்றும் மேற்குவங்கம் உட்பட பல மாநிலங்களில் போராட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். மறியல் காரணமாக பல இடங்களில் ரயில் போக்குவரத்தில் சிறிது தாமதம் ஏற்பட்டது.

திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் ரயில் மறியல் போராட்டம் அறிவித்தனர். இதையடுத்து மாநகர கமிஷனர் லோகநாதன் உத்தரவின்பேரில் அண்ணாமலை நகரில் உள்ள அய்யாக்கண்ணு வீட்டுக்கு உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி, இன்ஸ்பெக்டர் மணிராஜ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு அவரை வீட்டு காவலில் அடைத்தனர். அதைதொடர்ந்து அய்யாக்கண்ணுவிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் புறநகர் மாவட்ட பகுதியில் உள்ள ரயில் நிலையங்களில் மறியல் போராட்டம் நடத்த அனுமதி கோரினார். அதற்கும் போலீசார் மறுப்பு தெரிவித்ததால் வீட்டில் இருந்து வெளியேறிய அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகள், திருச்சி- கரூர் பைபாஸ் சாலையில் அமர்ந்து சாலை மறியல் நடத்தினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அய்யாக்கண்ணு உள்பட 15 பேரை கைது செய்து அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் போலீசார் அடைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Tags : road blockade protest ,withdrawal ,
× RELATED பாஜக தேசிய தலைவரான ஜெ.பி.நட்டா,...