×

ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை முறையாக நடத்தி தீர்வு காண வேண்டும் ஏஐடியூசி ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தல்

தஞ்சை, பிப்.19: கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஏஐடியூசி ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் கூட்டம் தஞ்சாவூர் சங்க அலுவலகத்தில் தலைவர் மல்லி தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியின்போது இறந்துவிட்ட தொழிலாளர், பணியாளர் வாரிசுகளுக்கு நிர்வாகத்தால் வழங்கப்படும் குடும்பநல நிதி ரூ.3 லட்சம் ஒரு வருட காலமாக வழங்கப்படாமல் அந்த குடும்பங்கள் வறுமையில் வாடிக் கொண்டிருக்கின்ற நிலையை உணர்ந்து கழக நிர்வாகம் உடனே குடும்பநல நிதியை வழங்க வேண்டும். பணியில் உள்ள தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்டு ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படுகின்ற செஸ் தொகை ரூ. ஒரு லட்சம் கடந்த 2020 ஏப்ரல் முதல் வழங்கப்படவில்லை. இந்த தொகையையும் உடனே வழங்க வேண்டும். மேலும் ஓய்வு பெற்றவர்களுக்கு பணியின்போது சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட ஆர் பி எஸ் நல நிதி தொகை கடந்த 2016 ஏப்ரல் மாதம் முதல் நிறுத்தப்பட்டு, பிடித்தம் செய்யப்பட்ட தொகையை முழுமையாக வழங்கப்படும் என அறிவித்து பல வருடங்கள் ஆகியும் இன்னும் வழங்கப்படாமல் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கழக நிர்வாகம் உடனே பிடித்தம் செய்யப்பட்ட ஆர்பிஎஸ் தொகையை விரைந்து வழங்க வேண்டும். பணியில் உள்ள தொழிலாளர்களின் 14 வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை முறையாக பேசி முடித்து தீர்வு கண்டு வேலை நிறுத்தத்தை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் துரை மதிவாணன், பொதுச்செயலாளர் அப்பாதுரை, கவுரவ தலைவர் சந்திரமோகன், பொருளாளர் பாலசுப்பிரமணியன் நிர்வாகிகள் மாணிக்கம், வெங்கட பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : pay rise ,AITUC Pensioners' Association ,
× RELATED தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 4%...