காஸ் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தல்

தஞ்சை, பிப்.19: சமையல் எரிவாயு விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் என தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், துணை தலைவர் அன்பரசன் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் தெரிவித்துள்ளதாவது, கடந்த ஓர் ஆண்டு காலமாக கொரோனா தொற்று காரணமாக முடங்கிய பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிலிருந்து மீள வழியின்றி தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், மத்திய அரசு எந்தவித காரணமும் இன்றி திடீர் திடீரென பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை கடுமையாக உயர்த்தி வருகிறது. இந்த மாதம் பிப்ரவரி 4ம் தேதி சமையல் எரிவாயு விலை ரூ.25 உயர்த்தப்பட்டது. இந்நிலையில் நேற்று மீண்டும் இந்த மாதத்திலேயே 2வது முறையாக ரூ.50 உயர்த்தப்பட்டு சமையல் எரிவாயு விலை ரூ.785 ஆக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையை போல் சமையல் எரிவாயு விலையையும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றியமைக்கப்பட்டு இருப்பதால் எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் விருப்பம் போல் சமையல் எரிவாயு விலையை உயர்த்தி வருகின்றன. டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி 15ம் தேதி வரை 3 மாதத்தில் சமையல் எரிவாயு விலை ரூ.125 உயர்ந்துள்ளது. இது பொதுமக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை ஏற்றத்தால் காய்கறி முதல் அனைத்து உணவு பொருட்களின் விலையும் பல மடங்கு உயரும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்களின் நலனை முன்னிட்டு உயர்த்தப்பட்டுள்ள சமையல் எரிவாயு விலை மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு உடனே வாபஸ் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: