×

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம் 2வது நாளாக நீடிப்பு

தஞ்சை, பிப்.19: வருவாய்த்துறை அலுவலர்களின் நியாயமான 10 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு உடனே நிறைவேற்றக் கோரி, 2ம் நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கம் ஈடுபட்டதால் அலுவலகங்கள் வெறிச்சோடின. அலுவலக உதவியாளர் முதல் தாசில்தார் வரை அனைத்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும். துணை தாசில்தார்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தனி ஊதியம் 1,300, முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு ரூ 9,300 இணையான ஆரம்ப ஊதியம் ரூ 36,900 மற்றும் அலுவலக உதவியாளர், பதிவுரு எழுத்தர்களுக்கு தனி ஊதியம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட தலைநகரங்களில் அடிப்படை பயிற்சி (பவானிசாகர்) மற்றும் நில அளவை பயிற்சி வழங்கப்பட வேண்டும். பதவி உயர்வுக்கு இப்பயிற்சிகளிலிருந்து விலக்களிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வட்டாட்சியர் முதல் அலுவலக உதவியாளர் வரை நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். 2ம் நாளாக நேற்று போராட்டம் காரணமாக தஞ்சை மாவட்டம் முழுவதும் பணிகள் முடங்கியது. தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு, பாபநாசம், பூதலூர், திருவையாறு, திருவிடைமருதூர் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வருவாய்த்துறையினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் கலெக்டர் அலுவலகம், கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களில் பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. இதனால், பல்வேறு பணிகள் நிமித்தமாக அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

Tags : Revenue officials ,protest ,
× RELATED 26ம் தேதி ஒன்றிய அரசை கண்டித்து கடலில்...