×

தமிழக பட்ெஜட் தாக்கல் செய்யும் நாளில் அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டம் மாற்றுத்திறனாளிகள் சங்கம் அறிவிப்பு

தஞ்சை, பிப்.19: தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் தினத்தன்று, தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம், கும்பகோணம், பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் குடியேறும் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின், மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தஞ்சை கணபதி நகர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாவட்ட துணை தலைவர் சங்கிலிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் இளங்கோவன் சிறப்புரையாற்றினார். மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் சிவப்பிரியா, மாவட்ட துணை தலைவர் சுகுமார், ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் பிரபாகர், ஒன்றியத் தலைவர் கஸ்தூரி, பட்டுக்கோட்டை ஒன்றிய பொறுப்பாளர் நீதிபதி, அம்மாபேட்டை நிர்வாகி மகேஸ்வரி, தஞ்சை ஒன்றிய பொறுப்பாளர் ராதிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மாவட்ட செயலாளர் இளங்கோவன் கூறியதாவது:- தமிழக சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் தினத்தன்று, தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையிலும், கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாநில சிறப்பு அழைப்பாளர் வாசுதேவன் தலைமையிலும், பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலும் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம் நடத்தப்படும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 3,000, கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும். அரசு துறை நிறுவனங்களில் உள்ளது போல், தனியார் துறையிலும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மூன்று மையங்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு, குடியேறும் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து அங்கேயே மாற்றுத் திறனாளிகள் காத்திருப்பார்கள்” என்றார்.

Tags : Announcement ,Government Offices ,Immigration Struggle Association for the Handicapped ,presentation ,
× RELATED தேர்தல் ஆணையம் நடவடிக்கை...