×

தமிழக அரசை கண்டித்து ரத்தத்தால் கையெழுத்திட்டு மனு அனுப்பும் போராட்டம்

பட்டுக்கோட்டை, பிப்.19: ஆங்கிலேயர் ஆட்சி முதல் அரசியல்வாதிகள் காலம் வரை வருவாய்த்துறை கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க மறுக்கும் தமிழக அரசை கண்டித்து பட்டுக்கோட்டை வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் தங்களது ரத்தத்தால் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பும் போராட்டத்தை நடத்தினர். போராட்டத்திற்கு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க பட்டுக்கோட்டை வட்டத் தலைவர் வெங்கடாஜலபதி தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் பாலசுப்ரமணியன், செபஸ்டின், சேவகமூர்த்தி முன்னிலை வகித்தனர். செயலாளர் ஜெயக்குமார் வரவேற்றார். போராட்டத்தில் தஞ்சை மாவட்டத் தலைவர் தங்கராசு, மாவட்ட செயலாளர் மாரிமுத்து, மாநில அமைப்பு செயலாளர் நல்லதம்பி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.முடிவில் அனைத்துத்துறை சங்க மாவட்ட அமைப்பாளர் விஏஓ முருகேசன் நன்றி கூறினார்.

போராட்டத்தில் கலந்து கொண்ட கிராம உதவியாளர்கள் கோரிக்கையை வலியுறுத்தி அதை ஒவ்வொருவரும் மனுவாக எழுதி, தங்களது ரத்தத்தால் கையெழுத்திட்டனர். இதுகுறித்து போராட்டத்தில் கலந்து கொண்ட கிராம உதவியாளர்கள் சங்க தஞ்சை மாவட்ட செயலாளர் மாரிமுத்து நிருபர்களிடம் கூறுகையில், 1995ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா அரசு ஊழியர்களுக்கு வழங்குவதுபோல் கிராம உதவியாளர்களுக்கும் அனைத்து சலுகைகளும் வழங்கப்படும் என்று அரசாணை வெளியிட்டார். ஆனால் தற்போதுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த அரசாணையை கிடப்பில் போட்டுள்ளார். எனவே அவருடைய கவனத்தை ஈர்க்கும் விதமாக இன்று (நேற்று) தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய 17,000 கிராம உதவியாளர்கள் கோரிக்கையை வலியுறுத்தி தங்களது ரத்தத்தால் கையெழுத்திட்டுள்ளோம். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அனைத்துத்துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து பலகட்ட விபரீதமான போராட்டங்களை நடத்த உள்ளோம் என்று அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

Tags : Tamil Nadu ,government ,
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...