புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற கோயிலில் பிச்சை எடுப்பதற்கு லஞ்சம்? வைரலாகும் வீடியோவால் பரபரப்பு: போலீஸ் விசாரணை

புதுக்கோட்டை, பிப்.19: புதுக்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற கோயிலான சாந்தநாதர் சுவாமி கோயில் வளாகத்தில் பிச்சை எடுப்பதற்காக அனுமதி அளிக்க பெண்ணொருவர் ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ குறித்து புதுக்கோட்டை நகர காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டை கீழ ராஜவீதி அருகே இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சாந்தநாதர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. புதுக்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாக திகழ்கிறது. நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். அதேபோல் முக்கிய விசேஷ காலங்களில் இந்த கோயில் வளாகத்தில் உள்ள பல்லவன் குளத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து தங்கள் முன்னோருக்கு திதி கொடுப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 11ம் தேதி தைமாத அமாவாசை அன்று திதி கொடுப்பதற்காகவும், சிறப்பு வழிபாடு செய்வதற்காக அதிக அளவில் இக்கோயிலுக்கு வந்துள்ளனர். அப்போது கோயில் வளாகத்தில் பிச்சை எடுப்பதற்கு அனுமதி அளிப்பதற்காக ஒரு மூதாட்டியிடம் அந்த கோயிலில் தற்காலிகமாக சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் பெண் ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. அதேபோல் தர்ப்பணம் செய்யும் தொழிலில் ஈடுபட்ட புரோகிதர்களிடமும் அந்தப் பெண்மணி தலா ஆயிரத்து 600 ரூபாய் பணம் பெற்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்த வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் புதுக்கோட்டை நகர காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories:

>