×

கறம்பக்குடி அருகே புதிதாக திறப்பு செயல்படாத கொள்முதல் நிலையம் கொட்டி வைத்த நெல் அனைத்தும் சேதமானதாக விவசாயிகள் கவலை

கறம்பக்குடி, பிப்.19: கறம்பக்குடி தாலுகா தட்டாமனைப்பட்டியில் புதிதாக திறக்கப்பட்ட அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறந்தநாள் முதல் செயல்படாததால் விவசாயிகள் கொண்டு வந்து கொட்டி வைத்துள்ள நெல்மணிகள் சேதமாவதால் கொள்முதல்நிலையம் இயங்க நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா கீராத்தூர் ஊராட்சியில் தட்டாமனைப்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் அருகே உள்ள கீராத்தூர் ஊராட்சி மற்றும் பல்வேறு பகுதிகள் காவிரி பாயும் கடைமடை கல்லணை கால்வாய் அமைந்துள்ளதால் அப்பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். இதனால் கறம்பக்குடி தாலுக்காவில் உள்ள பகுதிகளில் உள்ள பல்வேறு ஊராட்சிகளில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறந்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கீராத்தூர் ஊராட்சி தட்டாமனைப்பட்டி கிராம விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கோயில் அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இங்கு விவசாயிகள் ஏராளமானோர் தாங்கள் அறுவடை செய்த நெல் அனைத்தையும் அனைவரும் குவியல் குவியலாக நெல் கொட்டி குவித்துள்ளனர். ஆனால் இன்று வரை எந்த ஒரு விவசாயினுடைய நெல்லையும் நேரடியாக கொள்முதல் செய்யாமல் குவித்து வைத்துள்ளனர். இதன் காரணமாக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால் இன்னும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு எடை மிஷின் மற்றும் எடை தராசு வரவில்லை என்று கூறி மழுப்பல் பதில் கூறுகின்றனர். இந்நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படாததால் குவித்து வைத்துள்ள நெல் மணிகள் அனைத்தும் சேதமாகி விட்டதாகவும், அரசு எங்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக இயங்க செய்ய வேண்டும் என விவசாயிகள் வேதனையுடன் கூறினர்.

Tags : Karambakudy ,procurement center ,
× RELATED பால் கொள்முதல் மையம் துவக்கம்