×

பாடாலூர் அருகே சீதேவிமங்கலத்தில் கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணி

பாடாலூர், பிப்.19: ஆலத்தூர் தாலுகா பாடாலூர் கிராமத்திலிருந்து சீதேவிமங்கலம் செல்லும் சாலையை சீரமைப்பு பணியை கிடப்பில் போடப்பட்டதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். ஆலத்தூர் தாலுகா பகுதியில் பாடாலூர் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு முக்கிய வணிக தலமாக விளங்கி வருகிறது. பாடாலூரிலிருந்து சீதேவிமங்கலம் செல்லும் சாலை முக்கிய இணைப்பு சாலையாகும். இந்த சாலை வழியாகதான் செட்டிகுளம், நாட்டார்மங்கலம், கூத்தனூர், சிறுவயலூர், மாவலிங்கை, குரூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நாள்தோறும் பல்வேறு பணிகளுக்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் பாடாலூர் வந்து செல்கின்றனர்.

மேலும் இந்த சாலையில் ஆயிரக்கணக்கான ஏக்கர் கிணற்று பாசன விவசாய நிலங்களும், மானாவாரி விவசாய நிலங்களும் உள்ளன. இந்த விவசாய நிலங்களுக்கு விவசாயிகள் தங்கள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை ஓட்டிச் செல்கின்றனர். விவசாய நிலங்களுக்கு தேவையான அனைத்து இடுபொருட்களையும் எடுத்துக் செல்கின்றனர். விவசாய நிலங்களில் விளையும் தானியங்களையும் எடுத்து வர வேண்டும். மேலும் பாடாலூரில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சீதேவிமங்கலம், கூத்தனூர், நாட்டார்மங்கலம், செட்டிகுளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அவர்கள் நாள்தோறும் சைக்கிள் மற்றும் பஸ், வேன் மூலம் வந்து செல்கின்றனர்.

மேலும், கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் போது பாடாலூர் வந்து இருசக்கர வாகனங்களைநிறுத்தி விட்டு மீண்டும் வந்து எடுத்து செல்கின்றனர். இதுபோல் பல்வேறு பயன்பாட்டுக்கும் மிகவும் முக்கியமான சாலையாக உள்ள இந்த சாலை மிகவும் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருந்து வந்தது. எனவே மிகவும் குண்டும் குழியுமாக உள்ள பாடாலூர் -சீதேவிமங்கலம் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி பணிக்கான டெண்டர் விடப்பட்டு சாலையை சீரமைப்பதற்காக பணிகள் தொடங்கியது. அதனையடுத்து முன்னதாக பழைய சாலையை பெயர்த்து போட்டனர். அதன்பின்னர் ஜல்லிக்கற்கள் கொட்டிய நிலையில் கடந்த ஒரு மாதமாக சாலை பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளிக்கு சென்று வரும் மாணவ மாணவிகள் விவசாயிகள் என பல்வேறு தரப்பினரும் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே கிடப்பில் போடப்பட்ட இந்த சாலையை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : Seedevimangalam ,Badalur ,
× RELATED பாடாலூரில் சித்ரா பவுர்ணமியை...