தா.பழூர் பகுதியில் பேருந்து பற்றாக்குறையால் அபாய பயணம் படியில் தொங்கியபடி செல்லும் பயணிகள்

தா.பழூர், பிப்.19: அரியலூர் மாவட்டம் தா.பழூர் மற்றும் அதை சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து மாணவர்கள் மற்றும் மாணவிகள் பள்ளி, கல்லூரிகள் செல்வதற்காக தா.பழூர் வர வேண்டியுள்ளது. இப்பகுதியில் இருந்து கும்பகோணம், ஜெயங்கொண்டம், அரியலூர் மற்றும் தஞ்சை ,திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு செல்ல வேண்டி உள்ளதால் போக்குவரத்திற்காக தா.பழூரை நடி வரவேண்டியுள்ளது. இதனால் தா.பழூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் தினமும் பேருந்தில் பயணம் செய்கின்றனர். தற்போது கொரோனா ஊரடங்கு காலத்தால் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படாமலும், பேருந்து வசதிகள் இன்றியும் பொது மக்கள் முடங்கி கிடந்தனர். தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதுபோல 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் துவங்கப்பட்டது. மீண்டும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. ஆனால் மாணவர்கள் பள்ளி செல்ல முன்யு இருந்தார்போல் தற்போது பேருந்து வசதிகள் செய்யப்படவில்லை. இதனால் பள்ளிக்கு சரியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மாணவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பள்ளி நாட்களில் காலை வேளையில் போதிய பேருந்துகள் இல்லாததால் மாணவர்கள் நேரத்திற்கு பள்ளி செல்ல முடியவில்லை என்றும், மாலை வேளையில் பேருந்து பற்றாக்குறை ஏற்பட்டு சாலை காத்து கிடக்கும் நிலை ஏற்படுவதாகவும் இரவு நேரங்களில் வீட்டிற்கு வருவதற்கு வெகுநேரமாவதால் பிள்ளைகள் வீட்டிற்கு வராததால் பெற்றோர்கள் தேடி செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஜெயங்கொண்டம் பகுதியில் இருந்து சுத்தமால்லி செல்லும் பேருந்தில் சிலால் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் அணைக்குடம், பொற்பதிந்த நல்லூர், கோடங்குடி உள்ளிட்ட பகுதி மாணவர்கள் தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வருகின்றனர். அதுபோல் நடுவலூர், மைக்கேல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிக்கு சிலால், அணைக்குடம் மற்றும் தா.பழூரில் இருந்து மாணவர்கள் அதிக அளவில் செல்கின்றனர்.

இவர்கள் பேருந்தில் இடம் இல்லாததால் நடை பயணமாகவும், சிலர் இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்களிடம் உதவி கேட்டும் செல்கின்றனர். இதுபோன்ற உதவி கேட்டு சென்ற இரண்டு சிறுவர்கள் சென்ற ஆண்டு வாகன விபத்தில் ஒரு மாணவன் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது படியில் தொங்கி கொண்டு பயணிக்கும் மாணவர்கள் படியில் இருந்து கீழே விழுந்து பலத்த காயத்துடன் மருத்துவமனை சென்றதாக கூறப்படுகிறது. இதேபோல் ஜெயங்கொண்டத்திலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு காலை வேளையில் அரசு பேருந்துகள் வருவது கிடையாது. அப்படி ஒன்று இரண்டு பேருந்துகள் இயக்கப்படும் நேரத்தில் அவைகள் மாணவர்கள் கூட்டமாக நிற்பதால் பேருந்துகள் நிறுத்தாமல் சென்று விடுவதாகவும், சில பேருந்துகள் நிறுத்தத்தில் இருந்து தூரமாக நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டு பறந்து சென்று விடுவதாகவும் கூறுகின்றனர்.

மாணவர்கள் அதிகமாக காலை வேளையில் தனியார் பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். மாணவர் அதிகளவில் கும்பகோணம் நோக்கி செல்வதாலும் பேருந்து பற்றாக்குறையாலும் மாணவர்கள் படிக்கட்டில் ஆபத்தான பயணம் செய்வதாக பயணிப்போர் கூறுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பள்ளி, கல்லூரி திறக்கும் போதும் பேருந்து பற்றாக்குறை காரணமாக அதிகாரிகளுக்கு மனு அளித்து பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கமாகி வருகிறது. தற்போது மாணவர்கள் கடும் சிரமத்திற்கு மத்தியில் பேருந்தில் உயிரை பணையம் வைத்து பயணித்து வருகின்றனர். இதனால் பெரிய அளவில் விபத்துக்கள் ஏற்படும் முன் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>