காரை அரசு பள்ளியில் கலெக்டர் ஆய்வு அரியலூர் கரைவெட்டி சரணாலயத்திற்கு வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரிப்பு

அரியலூர், பிப்.19: அரியலூர் மாவட்டத்தில் அழிந்து வரும் நிலையில் உள்ள பல்வேறு வெளிநாட்டு பறவைகளின் வருகை, கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் அதிகமாக உள்ளதாக பறவைகள் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

அரியலூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமாக உள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் வனத்துறை சார்பில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுக்கும் பணி நேற்று முன்தினம் (17ம்தேதி) தொடங்கியது. தமிழ் பல்கலைக்கழக சுற்றுச்சூழல்துறை தலைவர் டாக்டர்.சிவசுப்பிரமணியன் தலைமையில் தமிழ் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் மற்றும் மூலிகையியல் துறை மாணவர்கள், திருச்சி ஈவேரா கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். சரணாலயத்தில் போட்டோகேமரா, பைனாகுலர் உள்ளிட்ட அதிநவீன தொலைநோக்கு கருவிகளைக் கொண்டு ஒவ்வொரு பறவைகளின் வகை, அதன் தாய் நாடு, அதன் நிறம், இனப்பெருக்கம் உள்ளிட்ட பல்வேறு நிலைகள் குறித்து கணக்கெடுக்கும் பணி இரண்டு நாட்கள் நடைபெற்று நேற்றுடன் முடிவடைந்து. இதனையடுத்து பறவைகள் வருகை, அதன் தங்கும் கால,ம் இனப்பெருக்கம் குறித்து வனத்துறையிடம் அறிக்கை அளிக்கப்பட உள்ளது. அதன் அடிப்படையில் சரணாலயத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

இதில், தெற்காசியாவிலேயே அழியும் நிலையிலுள்ள வெண்கழுத்து நாரை வெங்கனூரில் கண்டுள்ளனர். மேலும் சாம்பல் நாரை, நெடுங்கால் உள்ளான், கூழைக்கிடா, பாம்புதாரா, அரிவாள்மூக்கன், வண்ணநாரை ஆகிய பறவையினங்கள் கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் அதிக அளவில் தற்போது காணப்பட்டு வருகிறது. லடாக் பகுதியில் அதிகளவில் உள்ள வரித்தலை வாத்து அதிகளவில் காணப்படுகிறது. மேலும், தமிழகம் ஒரே நேரத்தில் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இதனால் பறவைகள் இடமாற்றத்தால் ஏற்படும் எண்ணிக்கை குளறுபடிகளை தவிர்த்து சரியான எண்ணிக்கை கண்டறிந்து அதற்கு ஏற்ற வகையில் நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.

இந்தாண்டு வெளிநாடுகளிலிருந்து பல்வேறு வகையான பறவைகள் இந்த சரணாலயத்தில் தற்போது முகாமிட்டுள்ளது. பல்வேறு வகையான வெளிநாட்டு பறவைகள் கடந்த ஆண்டைவிட தற்போது அதிகளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தாண்டு வடகிழக்கு பருவமழை அதிகளவில் பெய்த காரணத்தினால் கரைவெட்டி மட்டுமின்றி வெங்கனூர், அரியலூர் பகுதியிலுள்ள ஏரிகளில் நீர் நிறைந்திருப்பதால் அந்த ஏரிகளிலும் பரவலாக பறவைகள் முகாமிட்டுள்ளது. நன்னீர்வாழ் 48 பறவையினங்களும், நிலத்தில் வாழக்கூடிய 68 வகையான பறவையினங்களை கண்டறிந்துள்ளதாகவும், தண்ணீரை முறையாக தேக்கி, மீன் பிடிக்காமல் வைத்திருந்தால் பறவைகளின் வரவு தொடர்ந்து அதிகமாக இருக்கும் என கணக்கெடுக்கும் பணி குறித்து குழுவின் தலைவர் பேராசிரியர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Related Stories: