×

வழிகாட்டு நெறிமுறைகளுடன் திறக்கப்பட்ட நாகை கலங்கரை விளக்கத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை

நாகை, பிப்.19: கொரோனா வைரஸ் தொற்று தடைகாலம் முடிந்து நாகை துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள கலங்கரை விளக்கத்திற்கு சுற்றுலா பயணிகள் வர தொடங்கியுள்ளனர். தஞ்சையை தலைநகரமாக கொண்டு சோழ மன்னர்கள் ஆட்சிகாலம் முதல் நாகை துறைமுகத்திற்கு என்று தனி சிறப்பு உள்ளது. சென்னை, மகாபலிபுரம், கடலூர், நாகை, கோடியக்கரை, மல்லிபட்டினம், ராமநாதபுரம், நாகை தூத்துக்குடி, மணப்பாடு, தொண்டி உள்ளிட்ட 25 இடங்களில் கடலில் செல்லும் கப்பல்கள் மற்றும் துறைமுகங்கள் இருக்கும் இடங்களை குறிப்பிட கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள கலங்கரை விளக்கத்தில் நாகை கலங்கரை விளக்கம் தனிச்சிறப்பை இன்று வரை பெற்றுள்ளது. இந்திய அரசால் கடந்த 1985ம் ஆண்டு 48 மீட்டர் உயரம் உடைய கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டது.

இந்த கலங்கரை விளக்கத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் வங்கக்கடலின் அழகையும், நாகை நகரத்தின் அழகு, நாகூர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயத்தின் கோபுரம் ஆகியவற்றை பார்வையிட்டு ரசிக்க முடியும். சுற்றுலா பயணிகளை மகிழ்வித்த நாகை கலங்கரை விளக்கம் இலங்கையில் உள்நாட்டு போர் உச்சத்திற்கு வந்தபோது பாதுகாப்பு கருதி நாகை கலங்கரை விளக்கம் 1994ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டது.
ஆனால் கலங்கரை விளக்கத்தில் இருந்து லைட் வெளிச்சம் கடலில் செல்லும் கப்பல்கள் மற்றும் மீனவர்களுக்கு வழிகாட்ட உதவியது. பின்னர் 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் தேதி முதல் மீண்டும் சுற்றுலா பயணிகளை கலங்கரை விளக்கம் வரவேற்றது. 23 ஆண்டு காலத்திற்கு பின்னர் நாகை கலங்கரை விளக்கத்தில் சுற்றுலா பயணிகள் ஏறி நாகை மாவட்டம் மற்றும் வங்க கடலின் அழகை ரசிக்க தொடங்கினர். இதனால் வெளிநாடு மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதற்கு இடையே கஜா புயல் தாக்கம் காரணமாக கலங்கரை விளக்கம் சில நாட்கள் மூடப்பட்டது. அதன்பின்னர் திறக்கப்பட்டது.

இதை தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 17ம் தேதி மூடப்பட்டது. கடந்த 1 ஆண்டு காலத்திற்கு பின்னர் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் பிப்ரவரி மாதம் 14ம் தேதி கலங்கரை விளக்கம் திறக்கப்பட்டது அறிந்து கலங்கரை விளக்கத்தை பார்ப்பதற்காக மாணவர்கள், சுற்றுலா பயணிகள் வருகை தர தொடங்கியுள்ளனர். இது குறித்து நாகை கலங்கரை விளக்க நிலைய அதிகாரி சின்னசாமி கூறியதாவது: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாகை கலங்கரை விளக்கம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்டது. மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் பிப்ரவரி மாதம் 14ம்தேதி திறக்கப்பட்டது. தினந்தோறும் மாலை 3 மணி முதல் 5 மணி வரை சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர். சிறியவர்களுக்கு ரூ.5, பெரியவர்களுக்கு ரூ.10, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ரூ.25 என கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

Tags : Naga Lighthouse ,
× RELATED இந்திய கடல் எல்லையை கண்காணிக்க நாகை...