×

கொடியேற்றத்துடன் நாகை அகஸ்தீஸ்வரர் கோயில் மாசி திருவிழா துவங்கியது

நாகை, பிப்.19: நாகை வெளிப்பாளையம் அகஸ்தீஸ்வரர் கோயிலில் மாசி திருவிழாவை முன்னிட்டு நேற்று கொடியேற்றம் நடைபெற்றது. வருகிற 26ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. நாகை வெளிப்பாளையத்தில் அகஸ்தீஸ்வரர் சிவன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு மாசி திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது. முன்னதாக அகஸ்தீஸ்வரர்- ஆனந்தவல்லி அம்பாளுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து கோயில் பிரகாரத்தை சுற்றி கொடி ஊர்வலம் நடந்தது. இதையடுத்து மங்களவாத்தியம் முழங்க கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்திற்கு பால், மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து மகா தீபாராதனை நடந்தது. பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா நாட்களில், சிம்ம வாகனம், பூத வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம், கைலாச வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 26ம் தேதி நடைபெறுகிறது. மறுநாள் 27ம் தேதி சாமி புறப்பாடாகி நாகை புதிய கடற்கரைக்கு சென்று அங்கு மாசி மக தீர்த்தவாரி நடைபெறுகிறது. தெப்போற்சவம் வரும் மார்ச் மாதம் 6ம் தேதி நடக்கிறது.

Tags : Nagai Agastheeswarar Temple Masi Festival ,
× RELATED திருச்சியில் இருந்து கரூர் வரை...