- ரங்கசாமி
- மோடி அரசு
- பிற்பகல்
- புதச்சேரி
- பிரசாதா கே. ஸ்டாலின்
- புதுச்சேரி
- ரங்கசாமி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கே. ஸ்டாலின்
- திமுகா
- புதுச்சேரி தத்தஞ்சாவடி சந்தைப்படுத்தல் குழு
புதுச்சேரி: புதுச்சேரியில் ரங்கசாமியை பொம்மை முதல்வராக வைத்துள்ள மோடி அரசு, தமிழ்நாடு போன்ற மாநிலங்களை நகராட்சிகளாக மாற்ற முயற்சிக்கிறது என புதுவையில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். புதுச்சேரியில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் தட்டாஞ்சாவடி மார்க்கெட்டிங் கமிட்டி பகுதியில் நேற்று இரவு நடந்தது. திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திமுக, காங்கிரஸ், விசிக வேட்பாளர்களை ஆதரித்து பேசியதாவது: தமிழ்நாட்டுக்கும், புதுச்சேரிக்கும் எப்போதும் ஒன்றாகதான் தேர்தல் நடக்கும். ஆனால், இந்த முறை புதுச்சேரிக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்துகிறார்கள். தேதியை மாற்றினால், நம்முடைய உணர்வுகளை மாற்றிட முடியுமா? தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வும் மீண்டும் திராவிட மாடல் அமைய வேண்டும். அதைதான் விரும்புகிறார்கள். டெல்லியின் ரிமோட் கண்ட்ரோலுக்கு தலையாட்டுகிற அடிமைகள் கூட்டத்தை தமிழக மக்கள் விருப்பவில்லை. அதே உணர்வுதான் புதுச்சேரி மக்களிடமும் இருக்கிறது.
புதுச்சேரியை அழிவில் இருந்து காக்க, புதுச்சேரியை வளர்க்க, நமது கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று அன்போடும், உரிமையோடும் கேட்கிறேன். அழகான புதுச்சேரியில் தேஜ கூட்டணியின் அலங்கோலமான ஆட்சி நடக்க நீங்கள் அனுமதிக்கலாமா? நம்முடைய டிமாண்ட் என்ன… ஒட்டுமொத்த புதுச்சேரி கோரிக்கை என்ன? புதுச்சேரி மாநிலம் ஆக வேண்டும். 16 முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியாச்சு.. ஆனால், ஒன்றிய அரசுக்கு மனமில்லை. இல்லை என்ற சொல்லி கையை விரித்துவிட்டது. ஏனென்றால், பாஜவை பொறுத்தவரை தமிழ்நாடு போன்ற மாநிலங்களை நகராட்சிகளாக மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதேபோல், புதுச்சேரிக்கு மாநில தகுதி வழங்காமல் ஊராட்சி அளவுக்கு ட்ரீட் பண்றாங்க.. இங்குள்ள அமைச்சர்களுக்கு அதிகாரம் இருக்கிறதா? சட்டசபைக்கு மாண்பு இருக்கிறதா?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கு மரியாதை இருக்கிறதா? இங்கு ஆல் இன் ஆல் யார் என்றால், ஆளுநர்தான். ஆளுநர் மூலமாக ரங்கசாமியை பொம்மை முதல்வராக வைத்திருக்கிறார்கள். நம்முடைய தாய்மொழியையும், தமிழினத்தையும் காக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். புதுச்சேரியில் இப்போது என்ன நடக்கிறது. ஆரம்ப கல்வி நிலையங்களிலேயே சிபிஎஸ்இ கல்வியை கொண்டு வந்து தாய்மொழி கல்வியை என்ஆர் காங்., – பாஜக கூட்டணி அரசு அழித்திருக்கிறது. கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு வந்த பிரதமர் மோடி என்ன சொன்னார் தெரியுமா? பெஸ்ட் புதுச்சேரி ஆக்குவோம் என்று சொன்றார். ஆனால், வொர்ஸ்ட் புதுச்சேரி ஆகி இருக்கிறது.
என்ஆர் காங்கிரஸ்-பாஜ கூட்டணி வொர்ஸ்ட் ஆக இருக்கிறது. சில நாட்களுக்கு முன் இங்கு வந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இரட்டை இன்ஜின் ஆட்சியால் வளர்ச்சி அதிகமாக இருக்கிறது என்று பேசியுள்ளார். எங்கு புதுச்சேரி வளர்ந்திருக்கிறது. ஒரு வேளை, கடலுக்கு அந்த பக்கம் இருக்குமா? அப்படி வளர்ந்த புதுச்சேரி இதுதான் என்றால், நான் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் இருக்கிறதா? புதுச்சேரிக்கு துரோகம் இழைத்த பிறகும் பாலாறும், தேனாறும் ஓடும் என்று அதே வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்ற வருகிறார்கள் என்றால், அவர்கள் புதுச்சேரி மக்களை பற்றி என்ன நினைக்கிறார்கள். எந்த முகத்தை வைத்துக் கொண்டு உங்களிடம் வாக்கு கேட்க பிரதமர் வருகிறார். இப்படிப்பட்ட டப்பா இன்ஜினை மறுபடியும் கொண்டு வருவோம் என்று பேசலாமா?
இவ்வளவு அவலங்களை சந்தித்தற்கு பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும்தான் காரணம். முதல்வராக இருந்த 5 ஆண்டு காலத்தில் ரங்கசாமி உள்ளாட்சி தேர்லை நடத்த முயற்சி செய்தாரா? இல்லையே. ஏன் நடத்தவில்லை. ஒருவேளை ஆளுநரை வைத்து ஏற்கனவே அவரை ஊராட்சி மன்ற தலைவர் போல் நடத்துகிறார். அதனால் தான் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் விட்டுவிட்டாரோ என்று தெரியவில்லை. தனக்காக குரல் கொடுக்க முடியாதவர், எப்படி உங்களுக்காக குரல் கொடுப்பார். என்ஆர் காங்., – பாஜக கூட்டணி என்ன செய்து கொண்டிருக்கிறது.
மின்துறையை தனியார் மயமாக்க துடிக்கிறது. கள்ளச்சாராய வியாபாரிகள் கையில் புதுச்சேரி சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறது. போதை பொருட்கள் தாராளமாக சப்ளை செய்கிறார்கள். சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. ஒப்பந்த ஆசிரியர்கள் குடும்பத்தோடு வீதிக்கு வந்து போராடி கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு பிரச்னையை தீர்க்காமல் கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் பிரதமரை அழைத்து வந்து ரோடு ஷோ நடத்துறீங்க. வெட்கா இல்லையா? தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிச்சாமி மாதிரிதான் ரங்கசாமியும் இருக்கிறார். இங்கு புதுசா ஒரு கட்சியை தேஜ கூட்டணியில் சேர்த்தால், கூட்டணியை விட்டு வெளியேறி விடுவேன் என்று கூறிய ரங்கசாமி, 24 மணி நேரத்தில் தன்னுடையை முடிவை மாற்றி கொண்டார். இதற்கான கட்டாயம் ஏற்பட்டது எப்படி? இதுதான் அடிமை மனோபாவம்.
முதல்வர் ரங்கசாமி இன்று பொறுப்பில் இருக்கிறார்கள். நான் அவரை பார்த்து கேட்பதெல்லாம், பீகாரில் நிதிஷ்குமாரை நினைத்து பாருங்கள். அவருடைய நிலை உங்களுக்கு வராது என்பது என்ன நிச்சயம். முதல்வர் ரங்கசாமி அவர்களே, மனசுல கை வச்சி செல்லுங்கள்.. நீங்கள் கேட்கும் அனைத்தையும் ஒன்றிய அரசு செய்துள்ளதா? தலைமை செயலரை மாற்றம் செய்யக்கூட உங்களுக்கு அதிகாரம் இல்லை. எத்தனை கோப்புகள் கவர்னர் மாளிகையில் தூங்கி கொண்டு உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் நீங்கள் கேட்ட முழுமையாக பட்ஜெட் தொகையை ஒன்றிய அரசு கொடுத்துள்ளதா? எப்படி எல்லாம் மக்களை வஞ்சித்து விட்டு, கவர்ச்சி வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றிவிடலாம் என்று நினைக்கிறோர்கள். பாஜ மேல் இருக்கும் பாசத்தால் புதுச்சேரி மக்களுக்கு ரங்கசாமி துரோகம் செய்வது நியாயமா?
ஆனால் புதுச்சேரி மக்கள் இம்முறை ஏமாற மாட்டார்கள். புதுச்சேரி மக்கள் மாற்றத்துக்கு, புதிய விடியலுக்கு தயாராகி விட்டார்கள். தமிழகத்தில் செயல்படுத்தும் திராவிட முற்போக்கு திட்டங்களை புதுச்சேரியில் செயல்படுத்துவோம். நீங்கள் அனைவரும் திமுக கூட்டணியை ஆதரிக்கணும். இந்த ஸ்டாலின் குரல், தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல புதுச்சேரிக்கும் சேர்த்துதான் எப்போதும் ஒலிக்கும். புதுச்சேரி திராவிட மாடலின் தொடர்ச்சியாக எப்போது விளங்கும். புதுச்சேரி புதிய விடியலையும், எழுச்சியையும் பெற திமுக, காங்கிரசை உள்ளிட்டக்கிய இந்தியா கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வையுங்கள். புத்துணர்வு கொண்ட புதுச்சேரியை உருவாக்குவோம். வெல்வோம் ஒன்றாக. இவ்வாறு அவர் பேசினார்.

