×

அரவக்குறிச்சி-தாராபுரம் சாலையில் மெகா பள்ளம் சீரமைப்பு

அரவக்குறிச்சி, பிப்.19: அரவக்குறிச்சியில் போக்குவரத்து அதிகமுள்ள தாராபுரம் சாலையில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்த மெகா பள்ளம் தினகரன் செய்தி எதிரொலியாக உடனடியாக சீரமைக்கப்பட்டது.
அரவக்குறிச்சியில் தாராபுரம் சாலை வழியாக தினசரி 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், தோகைமலை அருகில் கரிக்காலியில் உள்ள சிமென்ட் ஆலையில் இருந்து தினசரி கோவை, திருப்பூர், பொள்ளாச்சி உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களுக்கும் மற்றும் கேரளாவிற்கும் சிமெண்ட் லோடு லாரிகள் நூற்றுக்கணக்கில் அரவக்குறிச்சி வழியாகத்தான் செல்கிறது. காரைக்கால் மற்றும் நாகையிலிருந்து பொள்ளாச்சி வழியாக கேரளாவை இணைக்கும் முக்கிய சாலையாகவும் இந்த தாராபுரம் உள்ளது.

அரவக்குறிச்சி நகரின் முக்கிய சாலையான தாராபுரம் சாலையில் கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் மேற்கிலிருந்து அதிவேகமாக வருகின்றன. கரூர் சாலை சந்திப்பில் எப்போதும் மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். பள்ளி திறக்கும் மற்றும் பள்ளி விடும் நேரங்களில் அதிக அளவில் மாணவ, மாணவிகள் நடமாட்டத்துடன், பஸ்சுக்காகவும் காத்திருப்பார்கள். மேலும் பள்ளி, கல்லூரி வாகனங்களின் போக்குவரத்து அதிக அளவில் இருக்கும். இந்நிலையில் போக்குவரத்து அதிகமுள்ள தாராபுரம் சாலையிலுள்ள வங்கி அருகில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் அபாயகரமான பள்ளம் ஏற்பட்டது. இந்த பள்ளம் சீரமைக்கப்படாமல் அப்படியே கிடந்தது. தற்காலிகமாக கற்களை மட்டும் போட்டு வைத்திருந்தனர். அது இன்னும் விபத்தை அதிகப்படுத்தும் நிலையில் இருந்தது. பெரிய விபத்து ஏற்படும் முன் அபாயகரமான பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த செய்தி கடந்த 15ம் தேதி தினகரனில் படத்துடன் வெளிவந்தது. இதனை கண்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அபாயகரமாக இருந்த மெகா பள்ளத்தை மூடி சீரமைத்தனர். இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags : road ,Aravakurichi-Tarapuram ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...