தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் (59). வியாபாரி. இவரது மகன் பென்னிக்ஸ் (31). இவர்கள் சாத்தான்குளம் பஜாரில் செல்போன் கடை வைத்திருந்தனர். கடந்த 19.6.2020 அதிமுக ஆட்சியில் கொரோனா ஊரடங்கு காலத்தில் இரவில் நீண்ட நேரம் கடையை திறந்ததாக, சாத்தான்குளம் போலீசார் தந்தை, மகன் இருவரையும் காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு போலீசார் தாக்கியதில் இருவரும் இறந்தனர்.
இது தொடர்பாக சிபிஐ கொலை வழக்குப்பதிவு செய்து சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் தர், எஸ்ஐக்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ். சிறப்பு எஸ்ஐ பால்துரை, போலீஸ்காரர்கள் முருகன், முத்துராஜ், சாமத்துரை, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து ஆகிய 10 பேரை கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இதில், பால்துரை கொரோனாவால் உயிரிழந்தார். இந்த வழக்கில் எஞ்சிய 9 பேர் மீதான விசாரணை மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.முத்துக்குமரன், கடந்த மார்ச் 23ம் தேதி 9 போலீஸ்காரர்களும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்து தண்டனை விபரம் கடந்த 30ம் தேதி தெரிவிக்கப்படும்’ என்றார். இதன்படி கடந்த 30ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஒன்றிய மற்றும் மாநில அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கூடுதல் விபரங்கள் தேவை எனக் கூறி மீண்டும் 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
2ம் தேதி விசாரணையில் சிபிஐ தரப்பில் ஆஜரான வக்கீல், ‘குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும். அரிதினும் அரிதான காவல் கொடூர கொலை வழக்குகளில் தூக்கு தண்டனை வழங்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது’’ என்றனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தண்டனை விபரத்தை இன்று தெரிவிப்பதாகக் கூறி ஒத்திவைத்திருந்தார். இந்நிலையில் இன்று காலை வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி முத்துக்குமரன் மாலை 5.30 மணியளவில் தண்டனை விபரத்தை தெரிவிப்பதாகக் கூறி ஒத்திவைத்தார்.
அதனடிப்படையில், காவல் நிலைய மரணங்கள் சமுதாயத்தில் மிகவும் கொடியது என சாத்தான்குளம் வழக்கில் நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பை வாசித்தார்.
“காவல் நிலையத்தில் வைத்து இருவரும் காவல் சித்திரவதை செய்யப்பட்டு சாகடிக்கப்பட்டுள்ளனர். இருவரும் நிராயுதபானியாக இருந்தபோதும், இரவு முழுவதும் காவல் நிலையத்தில் வைத்து தாக்கியுள்ளனர். இருவரும் வியாபாரிகள். சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர்கள். அவர்கள் மீது எந்த குற்ற வழக்கும் இல்லை என்றே தெரிகிறது.
குற்றவாளிகளை சார்ந்து குடும்பம் உள்ளது என்பதால் தண்டனையை குறைக்க வேண்டுமென்பதை ஏற்க இயலாது. தண்டனை குற்றத்தின் தன்மையை பொறுத்தே தீர்மானிக்க வேண்டும். குற்றவாளிகள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதால், கடுமையான குற்றமாகவே கருத வேண்டும். பொதுமக்கள் பணத்தில் அரசு ஊதியம் பெற்றவர்கள், பொருளாதார அழுத்தத்தையோ, மன அழுத்தத்தையோ காரணமாக கூற இயலாது.
சட்டத்தை காக்க வேண்டியவர்களே குற்ற செயலில் ஈடுபட்டுள்ளார்கள். வேலியே பயிரை மேய்ந்து அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர். தந்தை மகன் இருவர் மீதும் பொய் வழக்கு போடப்பட்டுள்ளது என்பது நிரூபணம் ஆகியுள்ளது. எங்கு அதிகாரம் உள்ளதோ அங்கு பொறுப்பு அதிகமாக இருக்க வேண்டும். சட்ட திட்டங்களை காற்றில் பறக்கவிட்டு காவல்துறையினர் செயல் பட்டுள்ளனர். இரக்கமின்றி அடித்ததை கொடூரமாகவே பார்க்க வேண்டும்.
ஒரே நேரத்தில் தந்தை மகன் என ஒரு குடும்பத்தின் ஆணிவேர் பிடுங்கப்பட்டுள்ளது. சாதாரண நபர்கள் குற்ற செயல்களில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு சாதாரண தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால் சட்டத்தை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரே இதில் குற்ற செயல்களை செய்துள்ளனர்.
காவல் நிலையங்களில் ஏற்படும் மரணங்களில் நேரடி சாட்சிகள் அரிதிலும் அரிதாகத்தான் இருக்கும். அந்த வகையில் இந்த வழக்கில் நேரடி சாட்சியம் உள்ளது. குற்றவாளிகளுக்கு பொருளாதார ரீதியாகவும் கடுமையான தண்டனை வழங்கினால் தான் இது போன்ற குற்றங்கள் நடைபெறுவதை தடுக்க முடியும்.
வழக்கில் கைது செய்யப்பட்ட 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதிப்பதே சிறந்தது. இது போன்ற வழக்குகளில் ஆயுள் தண்டனை வழங்கினால், இப்படி செயல்படும் போலீசாருக்கு அச்சம் ஏற்படாது” என நீதிபதி தீர்ப்பு வழங்கினார். மேலும் இந்த வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு மரண தண்டனையுடன் ரூ.84 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
