×

மழையால் விளைச்சல் பாதிப்பு நெல் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்

க.பரமத்தி, பிப்.19: க.பரமத்தி ஒன்றிய பகுதிகளான சின்னதாராபுரம், புஞ்சைகாளகுறிச்சி, நஞ்சைகாளகுறிச்சி, தொக்குப்பட்டி, ராஜபுரம், தும்பிவாடி, விசுவநாதபுரி, அத்திப்பாளையம், மொஞ்சனூர், கார்வழி, அஞ்சூர், உள்ளிட்ட பகுதிகளில் சுமார் பல ஏக்கரில் பயிரிடப்பட்ட முதல்போக நெல் சாகுபடி அறுவடை பணிகளில், விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால், சின்னதாராபுரம், அஞ்சூர் ஆகிய பகுதிகளில் தமிழக அரசின் தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறந்து, விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்து வருகின்றனர். இந்தாண்டு ஜனவரி மாதம் வரை தொடர் மழையால், நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு 30 முதல் 35 மூட்டைகள் அறுவடை செய்து வந்த நிலையில், தற்போது மழை பாதிப்பால் சுமார் 18 முதல் 20 மூட்டைகள் வரை அறுவடை செய்வதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும், வருடந்தோறும் மத்திய அரசின் சார்பில் ஒரு கிலோ நெல்லுக்கு 50 பைசா விலை உயர்த்தி வருகின்றனர். ஆனால், தமிழக அரசு ஒரு கிலோ நெல்லுக்கு 40 பைசா மட்டுமே விலை உயர்த்தியுள்ளனர். தற்போது ஊக்க தொகையோடு சேர்த்து ரூ.19 ரூபாய் 58 பைசாவிற்கு ஒரு கிலோ நெல்லை கொள்முதல் செய்கின்றனர். இதனால், விவசாயிகளுக்கு மேலும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக நெல் விலை ஏற்றம் செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, தமிழக அரசு வழங்கும் விலை ஏற்றத்தை அறிவித்து, நெல் விவசாயிகளுக்கு வருவாய் இழப்பை ஈடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு