×

கரூர் சுக்காலியூர் அருகே குடிநீர் விநியோகிக்காததை கண்டித்து குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

கரூர், பிப்.19: கரூர் நகராட்சிக்குட்பட்ட சுக்காலியூர் அருகே கடந்த சில மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததை கண்டித்து பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் நகராட்சிக்குட்பட்ட செல்லாண்டிபாளையம் சுக்காலியூர் பிரதான சாலையில் சாலைப்புதூர் பகுதி உள்ளது. நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் இந்த பகுதியில் உள்ளன. இந்நிலையில், நேற்று காலை 9 மணியளவில் இந்த பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலிக்குடங்களுடன் திடீரென கரூர் திருமாநிலையூர் சாலையில் அமர்ந்து திடீரென சாலை மறியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், கரூர் திருமாநிலையூர் இடையே கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற தாந்தோணிமலை போலீசார் மற்றும் அதிகாரிகள், தற்காலிக ஏற்பாடாக லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் எனவும், ஒரு சில நாட்களில் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர். இதனால், இந்த பகுதியில் அரை மணி நேரம் பரபரப்புடன் காணப்பட்டது. மேலும், சுக்காலியூர் முதல் திருமாநிலையூர் வரை சாலையோரம் வாய்க்கால் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி காரணமாக குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இதனை விரைந்து சரி செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

Tags : road ,Karur Sukkaliyur ,
× RELATED கரூர் சுக்காலியூர் பாசன வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும்