ஆட்டையாம்பட்டியில் சிறுமியை கடத்தி திருமணம் தொழிலாளி போக்சோவில் கைது

ஆட்டையாம்பட்டி, பிப். 19: ஆட்டையாம்பட்டி  அடுத்த பெரிய சீரகாபாடி அம்மன் நகரை சேர்ந்த ஸ்ரீரங்கன் மகன் சின்ராஜ்(23). 9வது வகுப்பு வரை படித்துள்ள இவர், அருகில் உள்ள பட்டறையில் தறி  ஓட்டி வருகிறார். இவரது வீட்டுக்கு அருகே வசித்து வரும் 16 வயது சிறுமி, 10ம் வகுப்பு வரை படித்துவிட்டு, அதே பகுதியில் உள்ள மற்றொரு பட்டறையில் தறி ஓட்டி வந்துள்ளார். அடுத்தடுத்த வீடுகளில் வசிப்பதால் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த 13ம்தேதி காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இது குறித்து சிறுமியின் பெற்றோர், தங்களது மகளை சின்ராஜ் கடத்திச் சென்று விட்டதாக ஆட்டையாம்பட்டி போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், நேற்று இருவரையும் கண்டுபிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அப்போது, சின்ராஜூடன் வாழ விரும்புவதாக சிறுமி தெரிவித்தார். ஆனால் அவரது பெற்றோர் இதை ஏற்காததால், சிறுமியை கடத்தி கட்டாய திருமணம் செய்த  சின்ராஜை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், பெற்றோருடன் செல்ல மறுத்த சிறுமியை, சேலம் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.

Related Stories:

>