ஆத்தூரில் பழைய வீட்டை இடித்தபோது சுவர் இடிந்து விழுந்து பெண் பலி

சேலம், பிப்.19:சேலம் மாவட்டம் ஆத்தூர் தெற்கு உடையார்பாளையம் வீரமுத்துமாரியப்பன் கோயில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர், தனது பழைய வீட்டை இடித்து விட்டு, புதிய வீடு கட்ட முடிவு செய்தார். இதற்காக கட்டுமான பணியை மேற்கொள்ளும் பொறுப்பை ராஜா என்பவரிடம் வழங்கினார். அவர், கூலியாட்களை அழைத்து வந்து பழைய வீட்டை இடிக்கும் பணியை தொடங்கினார். ஆத்தூர் வடக்கு உடையார்பாளையத்தை சேர்ந்த சண்முகம் மனைவி புஷ்பா (50), நேருநகரை சேர்ந்த சபி (28) ஆகியோர் நேற்று முன்தினம், பழைய வீட்டை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஒரு பக்கத்தில் உள்ள சுவரை இடித்து தள்ளும்போது, மற்றொரு புறம் இருந்த சுவர் திடீரென இடிந்து விழுந்தது. அந்த சுவர், புஷ்பா மீது விழுந்து அமுக்கியது. இடிபாட்டில் சிக்கிய புஷ்பா, மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார். அப்பகுதியில் இருந்தவர்கள் வந்து, அவரது உடலை மீட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த ஆத்தூர் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். பின்னர், புஷ்பாவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர். இதனிடையே ஆத்தூர் தாசில்தார் அன்புச்செழியன் தலைமையில் வருவாய்த்துறையினரும் சம்பவ இடம் வந்து விசாரித்தனர்.

Related Stories:

More
>