சங்ககிரியில் துணிகரம் கோயில் உண்டியலை தூக்கி சென்ற கொள்ளையர்கள்

சேலம், பிப்.19: சங்ககிரியில் மாரியம்மன் கோயில் பூட்டை உடைத்து, உண்டியலை கொள்ளையர்கள் தூக்கிச் சென்றனர். இதுபற்றி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சங்ககிரியில் பழைய இடைப்பாடி சாலையில் உள்ள சிவியார் மாரியம்மன் கோயிலை, நேற்று முன்தினம் இரவு பூசாரி பழனிசாமி, சாத்தி விட்டுச் சென்றுள்ளார். நேற்று அதிகாலை, கோயிலின் பூட்டுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர், பூசாரிக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் கோயிலுக்குள் சென்று பார்த்தபோது, நள்ளிரவில் 3 பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், கோயிலில் சாமி சிலை முன் வைக்கப்பட்டிருந்த சில்வர் உண்டியலை பெயர்த்து எடுத்துச் சென்றுள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து சங்ககிரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். எஸ்ஐ செந்தாமரைச்செல்வி தலைமையிலான போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். கொள்ளையர்கள் தூக்கிச் சென்ற உண்டியலில் ₹30 ஆயிரம் வரை பணம் இருக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அப்பகுதி முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டும், தூக்கிச் செல்லப்பட்ட உண்டியல் கிடைக்கவில்லை. உண்டியலை உடைத்து பணத்தை எடுக்க முடியாததால், கையோடு அதனை கொண்டுச் சென்றிருப்பது தெரியவந்தது. இக்கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: