மூதாட்டி வீட்டில் 3 பவுன் திருட்டு

தர்மபுரி அதியமான்கோட்டை அக்ரி நகரை சேர்ந்தவர் குபேந்திரன். இவரது மனைவி ராமதேவி (59). கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு குபேந்திரன் இறந்து விட்டார். இந்நிலையில், ராமதேவி கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஓசூரில் உள்ள தனது மகளை பார்க்க சென்றுள்ளார். பின்னர் நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு  உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே  சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 3 பவுன் தங்க செயினை  மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, ராமதேவி  அதியமான்கோட்டை போலீசில் அளித்த புகரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கிணற்றில் மூழ்கி சிறுவன் பலி

தர்மபுரி மாவட்டம் அரூர் கெளப்பாறையை சேர்ந்தவர் வேடியப்பன். இவரது, மனைவி ராணி. இவர்களுக்கு சூர்யா (17) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் சூர்யா வீட்டின் அருகே கிணற்றில் குளிக்க சென்றார். அப்போது, படிக்கட்டில் உட்கார்ந்து குளித்து கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக தவறி உள்ளே விழுந்தார். நீச்சல் தெரியாததால் சூர்யா நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

பள்ளி மாணவி மாயம்

தர்மபுரி மாவட்டம் கோபிநாதம்பட்டி அருகே பே.தாதம்பட்டியை சேர்ந்தவர் கங்காதரன். இவரது மகள் நந்திதா (17). அதேப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் கடைக்கு சென்று விட்டு வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, அவரது பெற்றோர் கோபிநாதம்பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திமுக நிர்வாகி நியமனம்

தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளராக வினோத்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இத்தகவலை ஆதி திராவிடர் நலக்குழு செயலாளர் சுந்தரம் தெரிவித்துள்ளார்.

4 பேருக்கு கொரோனா

தர்மபுரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 6639 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 6555 பேர் குணமாகி உள்ளனர். 29 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Related Stories:

>