×

‘மும்மொழிக் கொள்கை’ என்பது இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை விரிவுபடுத்தும் முயற்சி: ஒன்றிய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவு விவரம்: தேசியக் கல்விக் கொள்கை 2020 சார்ந்து, அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் என்பது சாதாரண கல்விச் சீர்திருத்தம் அல்ல; அது மொழித் திணிப்பை நோக்கிய, நாம் நீண்டகாலமாக வெளிப்படுத்தி வந்த அச்சங்களை உறுதிப்படுத்தும் வகையிலான, நன்கு திட்டமிடப்பட்ட ஆழ்ந்த கவலைக்குரிய முயற்சியாகும். ‘மும்மொழிக் கொள்கை’ என்பது, உண்மையில் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை விரிவுபடுத்தும் முயற்சியாகும்.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழைக் கட்டாயமாக்க முடியாத – தொடர்ச்சியாகப் போதிய தமிழாசிரியர்களை நியமிக்க தவறிய இதே ஒன்றிய அரசு, இந்திய மொழிகளை ஊக்குவிக்கிறோம் என்று மாநிலங்களுக்குப் பாடம் எடுக்க நினைக்கிறது. இந்தச் செயல்திட்டத்தை அமல்படுத்த தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் எங்கே இருக்கிறார்கள்? கல்வித் துறையில் மிகப்பெரிய சுமையை ஏற்படுத்தும் இந்த நகர்வுக்கான நிதி ஆதாரம் எங்குள்ளது? எவ்விதத் திட்டமிடலும், வளங்களும், பொறுப்பும் இல்லாத உள்நோக்கம் கொண்ட மற்றுமோர் திட்டமாகவே இது தோன்றுகிறது.

இது மொழி குறித்த கேள்வி மட்டுமல்ல; நியாயம், கூட்டாட்சி மற்றும் சமவாய்ப்புகள் குறித்த கேள்விகளுமாகும். இந்தி பேசும் மாணவர்களைக் கட்டமைப்புரீதியான சலுகைகளை அளித்து, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் அவர்களுக்கு ஆதாயம் ஏற்படுத்துவதோடு, மாநிலங்களுக்கிடையே மேலும் ஏற்றத்தாழ்வுகளையே இது உண்டாக்கும்.
முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் உலகம் முன்னோக்கி நகரும் வேளையில், நம் குழந்தைகள் எதிர்காலத்திற்காகத் தயாராக இருக்க வேண்டும்.

செயற்கை நுண்ணறிவு, அனிமேஷன் – விஷுவல் எபக்ட்ஸ் – கேமிங் – காமிக்ஸ் உள்ளிட்ட துறைகளில் அவர்களது திறனை மேம்படுத்தி, அவர்களது அறிவியல் பார்வையையும் திறனாய்வுச் சிந்தனையையும் ஊக்குவிக்க வேண்டும். மாறாக, இத்தகைய பிற்போக்குத்தனமான, இறுக்கமான மொழிச் சுமை அவர்களது முன்னேற்றத்தைத் தடுப்பதாக உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தொடர்ச்சியாக எழுப்பிய நியாயமான – ஜனநாயகப்பூர்வமான கவலைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, இந்தியை திணிப்பதில் ஒன்றிய அரசு மும்முரமாக இருப்பது தெரிகிறது.

இந்தச் செயல், கூட்டுறவுக் கூட்டாட்சியியலுக்கு எதிரானது, கோடிக்கணக்கான இந்தியர்களின் மொழி அடையாளங்களை நேரடியாக அவமதிக்கும் செயல். இந்தியாவின் வலிமை என்பது, பன்முகத்தன்மையில்தான் இருக்கிறதே தவிர, திணிக்கப்படும் ஒற்றைத்தன்மையில் இல்லை. இந்தச் சமநிலையைக் குலைக்கும் எத்தகைய முயற்சிகளும் தவறானவை மட்டுமல்ல, ஆபத்தானதுமாகும்.

நம் நாட்டின் அடிப்படையான பன்மைத்துவத்தையே தாக்கும் இத்தகைய கொள்கைகள் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டிவையாகும். பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வும், அதன் என்டிஏ கூட்டணிக் கட்சிகளும் இந்த திணிப்பை ஏற்றுக்கொள்கின்றனரா அல்லது நமது மாணவர்களின் எதிர்காலம், அடையாளம் மற்றும் உரிமைகளுக்காக ஒரே ஒரு முறையாவது முதுகெலும்போடு எதிர்ப்பார்களா? இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Union Government ,Chennai ,CBSE ,
× RELATED 2024ல் ராஜ்யசபா சீட் தருவதாக கூறி...