×

பராமரிப்பு பணிக்காக தாவரவியல் பூங்கா பெரிய புல் மைதானம் மூடல்

ஊட்டி, பிப். 19:ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா பெரிய புல் மைதானத்தில் பராமரிப்பு பணிகள் துவக்கப்பட்ட நிலையில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கோடை சீசன் நெருங்கும் நிலையில், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா உட்பட தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பூங்காக்களிலும் பராமரிப்பு பணிகள் துவங்கி மும்முரமாக நடந்து வருகிறது. தாவரவியல் பூங்காவில் 200க்கும் மேற்பட்ட 5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், 35 ஆயிரம் தொட்டிகளில் நாற்று நடவு செய்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

தற்போது, பனிக்காலம் என்பதால், மலர் செடிகள் வாடிவிடாமல் இருக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுஒருபுறம் இருக்க, பூங்காவில் உள்ள புல் மைதானங்கள், கண்ணாடி மாளிகை, குளங்கள் ஆகிய பகுதிகளிலும் பராமரிப்பு பணிகள் துவக்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் பெய்த மழையால் பெரிய புல் மைதானம் பாதிக்கப்பட்டது. இருப்பினும், சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்ததால், பராமரிக்கும் பணிகள் துவக்கப்படாமல் இருந்தது. சிறிய புல் மைதானத்திற்குள் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு அதனை சீரமைத்தனர். இந்நிலையில், கோடை சீசன் நெருங்கிய நிலையில், பெரிய புல் மைதானம் பாராமரிப்பு பணிகள் துவக்கப்பட்டுள்ளன. இதனால், பெரிய புல் மைதானத்திற்குள் சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

Tags : Closure ,Botanical Garden Large Grass Ground ,
× RELATED மண்டல காலம் நிறைவு சபரிமலை கோயில் நடை...