×

ஊட்டியில் பனி மூட்டத்தால் மக்கள் அவதி

ஊட்டி, பிப்.19: ஊட்டியில் மூன்று நாட்களாக கடும் பனி மூட்டம் காணப்படுவதால் பகல் நேரங்களிலேயே குளிரால் மக்கள் அவதிப்படுகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் துவங்கி பிப்ரவரி மாதம் வரை பனி பொழிவு காணப்படும். குறிப்பாக, ஊட்டியில் கடும் உறைப்பனி நிலவும். டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் உறைப்பனி பொழிவு காணப்படும். அதேசமயம், குளிரும் அதிகமாக இருக்கும். இவ்விரு மாதங்களில் பெரும்பாலான நாட்களில் பனி மூட்டம் காணப்படும். பகல் நேரங்களில் பனி மூட்டம் காணப்பட்டால் குளிர் அதிகமாக இருக்கும். பிப்ரவரி மாதம் துவங்கினால், பனி மூட்டம் சற்று குறையும். பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும். ஆனால், இம்முறை மழையால் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பனிப் பொழிவு முற்றிலும் குறைந்து காணப்பட்டது. கடந்த மாதம் முதலே பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. அதேபோல், அடிக்கடி பனி மூட்டமும் காணப்படுகிறது. இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் பகல் நேரங்களில் பனி மூட்டம் நிலவுகிறது. குறிப்பாக, ஊட்டியில் மூன்று நாட்களாக பனி மூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால், குளிர் வாட்டியெடுக்கிறது. கடும் குளிரால் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, சுற்றுலா பயணிகளும் கடும் அவதிக்குள்ளாகினர்.

Tags : Ooty ,
× RELATED பூங்காவில் பூத்தது ரோஜா பூக்கள்