×

ஊட்டி கண்காட்சியில் மலர் அலங்காரம் மக்கள் இணையதளத்தில் கருத்து ெதரிவிக்கலாம்

ஊட்டி, பிப்.19: முதன்முறையாக பொதுமக்கள் கூறும் கருத்தின் அடிப்படையில் ஊட்டி மலர் கண்காட்சியில் மலர் அலங்காரம் வடிவமைக்க ஊட்டி தாவரவியல் பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஊட்டியில் குளு குளு காலநிலையை கொண்டாட ஆண்டுதோறும் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதற்காக, தாவரவியல் பூங்கா தயார் செய்யப்படும். 5 லட்சம் மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்படும். 35 ஆயிரம் மலர் தொட்டிகளை கொண்டு மலர் அலங்காரம் செய்யப்படும். இதுதவிர, ஆண்டுதோறும் 2 லட்சம் முதல் 3 லட்சம் கொய் மலர் அல்லது ரோஜாவை கொண்டு பூங்காவில் பிரமாண்ட மலர் அலங்காரம் செய்யப்படுவது வழக்கம். இந்த மலர் அலங்காரம் இதுவரை தோட்டக்கலைத்துறை உயர் அதிகாரிகளின் முடிவின்படியே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், இம்முறை முதன்முறையாக பொதுமக்களின் கருத்துக் கேட்டு, அவர்கள் கூறும் கருத்தின் அடிப்படையில் மலர் அலங்காரத்தை தேர்வு செய்து அமைக்கப்பட உள்ளது. இதனால், வழக்கத்தை காட்டிலும் இம்முறை வித்தியாசமாக அமைக்கப்பட வாய்ப்புள்ளது.

இது குறித்து பூங்கா அதிகாரிகள் கூறியதாவது: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் வரும் மே மாதம் 124வது மலர் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இக்கண்காட்சியில், பிரமாண்ட மலர் அமைப்புகள் பொதுமக்களின் கருத்துக்களின் பேரில் வடிவமைக்கப்பட உள்ளது. இதுதொடர்–்பாக, பொதுமக்களிடம் இருந்து கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும், இதில், தேர்வு செய்யப்படும் பிராம்மாண்ட மலர் அமைப்பு மலர் காட்சியில் அமைக்கப்படுவதுடன் தேர்வு செய்யப்பட்ட அமைப்பு பற்றி கருத்து வழங்கிய நபருக்கு முக்கிய விருந்தினர் மூலம் மலர்க்காட்சியில் பரிசுகள் வழங்கப்படும். எனவே, பொதுமக்கள், மாணவ, மாணவிகள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் தங்களின் பிரமாண்ட மலர் அமைப்பு தொடர்பான கருத்துக்களை உரிய புகைப்படங்களுடன் பதிவு செய்து கொள்ள வேண்டும். இது தொடர்பான தகவல்கள் நீலகிரி மாவட்ட இணையதளமான nilgiris.nic.inல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் பொதுமக்கள் தங்களின் கருத்துக்களை பதிவேற்றம் செய்யலாம்.

Tags : Ooty Exhibition People ,
× RELATED குன்னூரில் கோடைகால ஹாக்கி பயிற்சி முகாம் நிறைவு