×

அ.தி.மு.க.வினர் பேச்சை கேட்டு சிறுபான்மை மக்கள் ஏமாற மாட்டார்கள் மதசார்பற்ற கட்சியுடன் கூட்டணி

கோவை, பிப். 19: தமிழக சட்டமன்ற தேர்தலில் மதசார்பற்ற கட்சியுடன் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணை தலைவர் தெஹலான் பாகவி தெரிவித்தார். கோவையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணை தலைவர் தெஹலான் பாகவி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: எஸ்.டி.பி.ஐ. கட்சி மதத்திற்கு எதிரான கட்சியல்ல. ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.வை தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். வரும் சட்டமன்ற தேர்தலை முக்கியமானதாக பார்க்கிறோம். அ.தி.மு.க.வை வைத்து பா.ஜ. இயங்கி வருவதை முறியடிப்போம். எங்களின் முக்கிய நோக்கம் மதசார்பற்ற அணியை பலப்படுத்த வேண்டும். பா.ஜ. கூட்டணி வெற்றி பெறக்கூடாது.

வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைப்பது குறித்து தற்போது கூற முடியாது. மதசார்பற்ற கட்சிகள் எங்களுடன் பேசி வருகின்றனர். நாங்கள் மதசார்பற்ற கட்சியுடன்தான் கூட்டணி வைப்போம். பா.ஜ. .கூட்டணியை தோற்கடிப்போம். அ.தி.மு.க.வினர் பேச்சை கேட்டு சிறுபான்மை மக்கள் ஏமாற மாட்டார்கள்.பா.ஜ. ஆட்சி செய்யாத மாநிலங்களில் குதிரை பேரத்தில் ஈடுபடுகின்றனர். தேர்தலில் மின்னணு வாக்கு மிஷின் மேல் எங்களுக்கு நம்பிக்கையில்லை. வளர்ந்த நாடுகள் கூட இதனை செய்வதில்லை. எனவே, பழைய முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டும். தேர்தல் வரும் நேரத்தில் அதிகாரிகள் மாற்றம் சரியான நெறிமுறை அல்ல. மத்திய அரசை எதிர்த்து நடத்தப்படும் போராட்டங்களை திசை திருப்ப மோடி அரசு போராட்டத்திற்கு வெளிநாட்டினர் தொடர்பு, தேசவிரோத சக்திகள் உதவி இருக்கிறது என கூறுகின்றனர். டிவிட்டரில் டூல்கிட் பயன்படுத்தியதாக கூறி சமூக ஆர்வலர்கள் மீது எடுத்துள்ள கைது நடவடிக்கை கண்டிக்கக்கூடியது. மத்திய அரசு குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த முயற்சித்தால் விவசாய போராட்டத்தைவிட பன்மடங்கு பெரிய அளவிலான போராட்டம் நாடு முழுவதும் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மாநில பொருளாளர் அபுதாகீர், மண்டல செயலாளர் முஸ்தபா, மாவட்ட தலைவர் ராஜ உசைன், மன்சூர் உடன் இருந்தனர்.

Tags : alliance ,party ,AIADMK ,
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...