×

விடுபட்டவர்களுக்கும் கடன் தள்ளுபடி கோரி ஆனைமலை கூட்டுறவு சங்கத்தை விவசாயிகள் முற்றுகை

ஆனைமலை, பிப். 19: விடுபட்ட விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி செய்யக்கோரி ஆனைமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு மனு கொடுத்தனர். கடந்த 5 ம் தேதி தமிழக முதல்வர் ஜனவரி 31 ம் தேதி வரை கூட்டுறவு வங்கிகளில்  நிலுவையில் இருந்த விவசாயிகளின்  பயிர் கடனை தள்ளுபடி செய்து அறிவிப்பு வெளியிட்டார். இந்திலையில் கடந்த டிசம்பர் 2020 மற்றும் ஜனவரி 2021 ல்  முன்கூட்டியே விவசாயிகள் சிலர் தங்களின்  கடன்தொகையை செலுத்தி உள்ளனர்.   ஆனைமலை எண் 8342 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயிகளில் 41 பேர் விடுபட்டு போனதாக கூறப்படுகிறது.

இதையடுத்து நேற்று 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆனைமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறும்போது,தகுதியான விவசாயிகளுக்கு ஜனவரி மாதம் 2021ல் கொடுக்க வேண்டிய கடன் தொகையை கூட்டுறவு சங்கத்தினர் இரண்டு மாதம் காலதாமதமாக பிப்ரவரியில் வழங்கியதால் 41 விவசாயிகள் தள்ளுபடி சலுகையை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே ஜனவரி மாதம் கடன் பெற்று தள்ளுபடி சலுகை பெற வேண்டிய விவசாயிகள் நிர்வாக குளறுபடியால் தற்போது சலுகை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தங்களுக்கும் பயிர் கடன் தள்ளுபடி சலுகை பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Tags :
× RELATED ஆர்வமுடன் வாக்களித்த 100 வயது மூதாட்டி