×

ஊதியம் வழங்க கோரி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

ஈரோடு, பிப். 19: ஜனவரி மாத ஊதியத்தை உடனடியாக வழங்க கோரி ஈரோட்டில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவலக வளாகத்தில், பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு அச்சங்க மாவட்ட தலைவர் தம்பிகலையான் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாலு முன்னிலை வகித்தார். இதில், ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் உரிய நேரத்தில் ஊதியம் வழங்க வேண்டும். ஜனவரி மாத ஊதியத்தை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். டி.ஓ.டி.,யில் தேர்வு செய்யப்பட்டு 1-10-2000ம் ஆண்டிற்கு பின் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கு ஜனாதிபத்ய உத்தரவை வழங்க வேண்டும். டிடி, ஜெஇ, ஜெஏஓ, ஜெடிஓ போன்ற துறை சார்ந்த தேர்வுகளை நடத்த வேண்டும். மூன்றாவது ஊதிய மாற்றம் சம்மந்தமாக டிஓடி வழூஙகியுள்ள வழிகாட்டுதல்படி பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதிய நிலவை தொகை வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமன தடையை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 8அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : BSNL ,payment Employees ,hunger strike ,
× RELATED சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில்...