இளம் பெண்ணுக்கு கொலை மிரட்டல் கணவரின் குடும்பத்தினர் மீது புகார்

ஈரோடு,பிப்.19: கொலை மிரட்டல் விடுக்கும் கணவரின் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட இளம் பெண் ஈரோடு எஸ்.பி.,யிடம் புகார் மனு அளித்தார். ஈரோடு கருங்கல்பாளையம் வாட்டர் ஆபீஸ் ரோட்டை சேர்ந்த வெங்கடாசலம் மனைவி தேவி(31) நேற்று ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் எஸ்.பி., தங்கதுரையிடம் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது: நான், கரூர் மாவட்டம் ஓமந்துரை சேர்ந்த வெங்கடாசலம் என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2006ம் ஆண்டு ஜூன் 29ம் தேதி திருமணம் செய்து கரூரில் வசித்து வந்தோம். எங்களுக்கு 13 வயதில் மகள் உள்ளார். என் கணவருக்கு திருமணத்துக்கு பின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. கணவரின் உறவினர் ஒருவருக்கு என் கணவர் டிராக்டர் வாங்குவதற்காக ரூ.1லட்சம் பணம் கொடுத்தார். அதற்கு அவர் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை தருவதாக உறுதி அளித்தார். இந்நிலையில் என் கணவர் இறந்து விட்டார். என் கணவரின் சகோதரி மகன், சொத்துக்களுக்கு அவர் தான் வாரிசு என கூறி பத்திரங்களில் கையெழுத்து போட வற்புறுத்தினார். நான் மறுத்து ஈரோட்டில் உள்ள எனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டேன். என் கணவரின் மொபைல் போன், பொருட்கள், வாகனங்களையும் வாங்கி வைத்து கொண்டனர். அவற்றை திரும்பி தரும்மாறு பலமுறை கேட்டு வருகிறேன். ஆனால் பணம், நகை உள்ளிட்ட பொருட்களை கேட்டால் உன் கணவரை எரித்தது போன்று உன்னையும், உன் மகளையும் எரித்து கொன்று விடுவோம் என கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே, கொலை மிரட்டல் விடுத்த என் கணவரின் உறவினர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், என் கணவர் சாவில் உள்ள மர்மங்களை கண்டறிந்து சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

Related Stories:

More
>