×

சாக்கடையை தூர்வாராத மாநகராட்சியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

ஈரோடு,பிப்.19:  ஈரோட்டில் கழிவு நீர் சாக்கடையை தூர்வாரத மாநகராட்சியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஈரோடு மாநகராட்சி 2ம் மண்டலம் 26வது வார்டு வாசுகி வீதி அருகில் உள்ள காசியண்ண வீதியில் 250க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், வணிக வளாகங்கள், இரு சக்கர வாகன பழுது நீக்கும் ஓர்க் ஷாப் போன்றவை இயங்கி வருகிறது. இந்த பகுதியில் உள்ள கழிவு நீர் சாக்கடையில் சுற்றுப்புற பகுதியின் கழிவு நீர் வந்து செல்கிறது. இதில், கடந்த 6 மாதமாக பிளாஸ்டிக் குப்பைகள், மது பாட்டில்கள் போன்றவை சாக்கடைகளில் தேங்கி, அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. மேலும், பாதாள சாக்கடையும் இன்னும் இணைப்பு தரராததல் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வந்தனர். இந்நிலையில், மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சாக்கடையை தூர்வாராததை கண்டித்தும், உடனடியாக சாக்கடையை மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் 30க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார் பொதுமக்களிடம் சமரச பேச்சு நடத்தவே, பொதுமக்கள் சமாதானம் அடையாததால், டவுன் டிஎஸ்பி ராஜூ நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் மக்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதற்கிடையில், அவ்வழியே வந்த ஈரோடு மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., ராமலிங்கத்தை வழி மறித்து, பொதுமக்கள் பிரச்னை குறித்து தெரிவித்தனர். எம்.எல்.ஏ., காசியண்ண வீதிக்கு சென்று பார்வையிட்டார். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகளிடம் சாக்கடையை முறையாக தூர்வாரி உடனடி நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தார். இதன்பேரில், சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியலால் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : road ,blockade ,corporation ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...