×

நெல் கொள்முதலை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் ஒழுங்குமுறை விற்பனைகூட அதிகாரிகள் பேச்சுவார்த்தை சேத்துப்பட்டில் கட்டண சேவை வரி வசூலிக்க எதிர்ப்பு

சேத்துப்பட்டு, பிப்.19: கட்டண சேவை வரி வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து, சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதை வியாபாரிகள் நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் நெல் உற்பத்தியில் திருவண்ணாமலை மாவட்டம் 2ம் இடத்தில் உள்ளது. இங்குள்ள விவசாயிகள் நெல், மணிலா, பயறு, மிளகாய் போன்ற தங்களது வேளாண் விளைபொருட்களை, சேத்துப்பட்டு பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகின்றனர். இங்கு நல்ல விலை கிடைப்பதால் திருவண்ணாமலை மட்டுமின்றி விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் விளைபொருட்களை விற்று வருகின்றனர்.இந்நிலையில், வியாபாரிகள் வெளியே விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்யும் நெல்லுக்கும், சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கட்டண சேவை வரியை வசூலிக்கும் முறை உள்ளது. இந்த நடைமுறை கொரோனா ஊரடங்கின்போது மத்திய அரசின் உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த 5 மாதங்களாக ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் மட்டுமே கட்டண சேவை வரி வசூலிக்கப்பட்டு வந்தது.

தற்போது வியாபாரிகள் விவசாயிகளிடம் வெளியே கொள்முதல் செய்து, அரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைக்கும் நெல்லுக்கும் கட்டண சேவை வரி வசூலிக்கப்படுகிறதாம். இதனால் அரிசி ஆலை முதலாளிகள் வியாபாரிகளிடம் நெல் மூட்டைகளை வாங்க மறுக்கின்றனர். இந்த நடைமுறைக்கு தமிழகத்திலுள்ள அனைத்து வியாபாரிகள், அரிசி ஆலை உற்பத்தியாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், நேற்று சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வியாபாரிகள் விவசாயிகளிடம் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் ஒருநாள் அடையாள போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விவசாயிகள் கொண்டுவந்த நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்தன.இதையடுத்து, வியாபாரிகளிடம் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் தினேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், கட்டண சேவை வரி வசூலிப்பு முறையை கைவிட வேண்டும் என வியாபாரிகள் தெரிவித்ததால், நேற்று ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் கொள்முதல் நடக்கவில்லை. வியாபாரிகளின் திடீர் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Traders ,struggle ,purchase ,
× RELATED ரூ 457.76 கோடி தவறான உள்ளீட்டு வரி 151...