×

ஊராட்சி தலைவரை கண்டித்து கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம் கலசபாக்கம் அருகே பரபரப்பு தன்னிச்சையாக செயல்படுவதற்கு எதிர்ப்பு

கலசபாக்கம், பிப்.19: கலசபாக்கம் அருகே ஊராட்சி தலைவர் தன்னிச்சையாக செயல்படுவதாக கூறி வார்டு கவுன்சிலர்கள் கோரிக்கை மனுவுடன் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அருகே வீரலூர் ஊராட்சியில் உள்ளது. ஊராட்சி தலைவராக அதிமுகவை சேர்ந்த ஜான்பாஷா உள்ளார். இந்த ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளது. இந்நிலையில், ஊராட்சி தலைவர் ஜான்பாஷா வார்டு கவுன்சிலர்களை ஆலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், ஊராட்சி தொடர்பான கோப்புகளை வீட்டில் வைத்து நிர்வாகம் செய்வதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து நேற்று முன்தினம் பிடிஓ விஜயலட்சுமியிடம் வார்டு கவுன்சிலர்கள் புகார் மனு அளித்தனர். இந்நிலையில், நேற்று காலை வீரலூர் ஊராட்சி அலுவலகம் முன்பு, துணைத்தலைவர் கவிதா தலைமையில் வார்டு கவுன்சிலர்கள் கோரிக்கை மனுவுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது: ஊராட்சி தொடர்பான ஆவணங்களை ஊராட்சி தலைவர் ஜான்பாஷா தனது வீட்டில் வைத்து நிர்வாகம் செய்து வருகிறார். இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கும்போது மட்டும் ஊராட்சி தொடர்பான கோப்புகளை ஊராட்சி அலுவலகத்துக்கு கொண்டு வருகிறார். எங்களது வார்டுகளில் குடிநீர், சுகாதாரம், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்கு ஊராட்சி தலைவர் ஒத்துழைப்பு தருவதில்லை. அவர் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார். வெளிப்படையான நிர்வாகம் தேவை என பிடிஓவிடம் மனு அளித்துள்ளோம். எனவே, ஊராட்சி மன்ற அலுவலகத்தை தினந்தோறும் திறந்து நிர்வாகம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர். ஊராட்சி தலைவருக்கு எதிராக கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Councilors ,panchayat leader ,riot ,Kalasapakkam ,
× RELATED வம்பு சண்டைக்கு போறதில்ல; வந்த சண்டையை...