×

மேலூரை தவிர 27 தொகுதிகளுக்கும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு: 12 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு; 5 பேருக்கு சீட் இல்லை

சென்னை: தமிழக சட்டப் பேரவையில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடக்கூடிய 27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை நீண்ட இழுபறிக்கு பின்பு அகில இந்திய காங்கிரஸ் தலைமை நேற்று வெளியிட்டது. மேலூர் தொகுதிக்கான வேட்பாளர் மட்டும் இன்று அறிவிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேட்பாளர் பட்டியலில் சிட்டிங் எம்எல்ஏக்கள் 5 பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 12 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் சட்டப் பேரவை தேர்தல் திருவிழா களைகட்டி வருகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 20 நாட்கள் மட்டும் எஞ்சியுள்ள நிலையில் அனைத்து கட்சிகளின் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சிகளுமே கூட்டணியை இறுதி செய்து, பிரசாரத்தில் தீவிரமாக களம் இறங்கியுள்ளது. வேட்பு மனு தாக்கல் முடிய இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளது. ஆனால் தேசிய கட்சியான காங்கிரஸ் மட்டும் வேட்பாளர்களை அறிவிக்காமல் இருந்ததால், கூட்டணி கட்சி தலைவர்கள் யாருக்கு வாக்கு கேட்பது என்பது தெரியாமல் திணறி வந்தனர்.

வேறு வழியில்லாமல் கை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் கட்சி, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை விரைந்து முடிக்க வேண்டும் என்று முதல் ஆளாக கூட்டணிக்கு தலைமையான திமுகவிடம் தீவிரம் காட்டியது குறிப்பிடத்தக்கது. அந்த வேகம், வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் இல்லையே என்று விமர்சனம் எழுந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் கடந்த 2021ல் போட்டியிட்ட 25 தொகுதிகளை விட 3 தொகுதிகள் அதிகமாக காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

அதன்படி பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர், சோளிங்கர், உதகமண்டலம், ஈரோடு கிழக்கு, அறந்தாங்கி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்குடி, சிவகாசி, திருவாடானை, ஸ்ரீவைகுண்டம், நாங்குநேரி, குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், வேளச்சேரி, ஊத்தங்கரை, துறையூர், கவுண்டம்பாளையம், ஆத்தூர், பென்னாகரம், சிங்காநல்லூர், அம்பாசமுத்திரம், கிருஷ்ணகிரி, உசிலம்பட்டி, சங்கரன்கோவில், மேலூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் வாய்ப்பு கேட்டு டெல்லியில் முகாமிட்டனர்.

இதற்கிடையே, வேட்பாளர் தேர்வில் பணம் விளையாடுவதாக எழுந்த தகவல் காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான புகார்கள் ராகுல்காந்திக்கு பறந்ததால், உடனடியாக, ஏற்கனவே வெளியிட இருந்த வேட்பாளர் பட்டியலை அவர் நிறுத்தி வைத்தார். மீண்டும் புதிய பட்டியலை தயார் செய்யும்படி கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே முதல்வர், துணை முதல்வர் அனல் பறக்கும் பிரசாரத்தை மேற்கொண்டுள்ள நிலையில், உடனடியாக காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவிக்க கோரி காங்கிரஸ் தலைமையை முதல்வரும் வலியுறுத்தினார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஆலோசனை கூட்டம் ராகுல்காந்தி தலைமையில் டெல்லியில் நடந்தது. இதனால் நேற்று முன்தினம் இரவு பட்டியல் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் காங்கிரசார் இருந்தனர். ஆனால் வெளியிடப்படவில்லை. முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட இருந்த நிலையில் நேற்று ஒரே கட்டமாக வேட்பாளர் பட்டியலை வெளியிட ராகுல்காந்தி அறிவுறுத்தியுள்ளார்.

இதனால் நேற்றைய தினம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என்ற தகவல் பரவியது. அதன்படி, தமிழ்நாட்டில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் நேற்று பிற்பகல் வெளியிட்டார்.  இந்த பட்டியலில், சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை போட்டியிடுகிறார்.

பொன்னேரியில் துரை சந்திரசேகர், வேளச்சேரியில் அசன் மவுலானா, சோளிங்கர் தொகுதியில் முனிரத்தினம் போட்டியிடுகிறார்கள். காங்கிரஸ் 28 தொகுதிகளில் போட்டியிடும் சூழலில் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலூர் தொகுதிக்கான வேட்பாளர் மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. 27 தொகுதிக்கான வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் விவரம் வருமாறு:

பொன்னேரி (தனி)- துரை சந்திரசேகர், வேளச்சேரி- அசன் மவுலானா, ஸ்ரீபெரும்புதூர் (தனி)- செல்வப்பெருந்தகை, சோளிங்கர்- ஏ.எம்.முனிரத்தினம், ஊத்தங்கரை (தனி)- ஆர்.குப்புசாமி, கிருஷ்ணகிரி- டாக்டர் ஏ.செல்லகுமார், பென்னாகரம்- ஜி.கே.எம்.தமிழ் குமரன், ஆத்தூர் (தனி)- எஸ்.கே.அர்த்தனாரி, ஈரோடு கிழக்கு- கோபிநாத் பழனியப்பன், உதகமண்டலம்- பி.ராமச்சந்திரன், கவுண்டம்பாளையம்- கே.பி.சூர்ய பிரகாஷ்,

சிங்காநல்லூர்- வி.ஸ்ரீநிதி நாயுடு, துறையூர் (தனி)- விச்சு லெனின் பிரசாத், கடலூர்- ஏ.எஸ்.சந்திரசேகரன், மயிலாடுதுறை- ஜமால் யூனுஸ் முகமது, அறந்தாங்கி- டி.ராமசந்திரன், காரைக்குடி- எஸ்.மாங்குடி, உசிலம்பட்டி- டி.சரவண குமார், சிவகாசி- கணேசன் அசோகன், திருவாடானை- ராம கருமாணிக்கம், ஸ்ரீவைகுண்டம்- எஸ்.ஊர்வசி அமிர்தராஜ், சங்கரன்கோவில் (தனி)- சங்கை கணேசன், அம்பாசமுத்திரம்- வி.பி.துரை, நாங்குநேரி- ரூபி மனோகரன், குளச்சல்- டாக்டர் தாரகை கத்பர்ட், விளவங்கோடு- டி.டி.பிரவீன், கிள்ளியூர்- எஸ்.ராஜேஷ் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அந்தந்த தொகுதிகளில் தேர்தல் பிரசாரப் பணிகள் தற்போதே வேகம் எடுக்க தொடங்கியுள்ளன. கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டிற்குப் பிறகு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சி தனது செல்வாக்கை நிரூபிக்க இந்த வேட்பாளர்களை முன்நிறுத்தி தேர்தலை எதிர்கொள்ள தயாராகிவிட்டது. மீதமுள்ள ஒரு தொகுதிக்கான (மேலூர்) அறிவிப்பு இன்று வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் பட்டியலை பொறுத்தவரை சிட்டிங் எம்எல்ஏக்கள் 12 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 5 பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* தனி தொகுதிகளில் தகுதியான வேட்பாளர்கள்
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கையொப்பத்துடன் வெளியாகியுள்ள இந்த பட்டியல், அக்கட்சியின் தேர்தல் பணிகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது. இந்த பட்டியலில் அனுபவம் வாய்ந்த தலைவர்கள் மற்றும் புதிய முகங்களுக்கு சமமான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட தனித் தொகுதிகளில் தகுதியான வேட்பாளர்களை காங்கிரஸ் களம் இறக்கியுள்ளது.

பொன்னேரி தனித் தொகுதியில் துரை சந்திரசேகர், ஸ்ரீபெரும்புதூர் தனித் தொகுதியில் கே.செல்வப்பெருந்தகை ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதேபோல் ஊத்தங்கரை தொகுதியில் ஆர்.குப்புசாமி, ஆத்தூர் தொகுதியில் எஸ்.கே.அர்த்தநாரி, துறையூர் தொகுதியில் எம்.விச்சு லெனின் பிரசாத் மற்றும் சங்கரன்கோவில் தொகுதியில் சங்கை கணேசன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

* யார் யாருக்கு வாய்ப்பு?
தமிழக காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை கட்சி தலைமை அறிவித்துள்ளது. இதில் ஏற்கனவே சிட்டிங் எம்எல்ஏக்களாக உள்ள 12 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. குளச்சல்- பிரின்ஸ், தென்காசி- பழனி, விருத்தாசலம்- ராதாகிருஷ்ணன், உதகமண்டலம்- எஸ்.கணேஷ், மயிலாடுதுறை- ராஜ்குமார் ஆகிய 5 பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

இதில் தென்காசி, விருத்தாச்சலம் ஆகிய தொகுதிகள் திமுகவுக்கு சென்றுவிட்டதால் பழனி, ராதாகிருஷ்ணனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மீதமுள்ள 12 பேர் யாரென்றால் மாங்குடி, ரூபி மனோகரன், ஏ.எம்.முனிரத்தினம், துரை சந்திரசேகர், அசோகன், கரு மாணிக்கம், ஊர்வசி அமிர்தராஜ், ராஜேஷ்குமார், எஸ்.டி.ராமசந்திரன், தாரகை கத்பர்ட், செல்வப்பெருந்தகை, அசன் மவுலானா ஆகியோர்.

* இழுபறி ஏன்? பரபரப்பு தகவல்கள்
டெல்லியில் நேற்று முன்தினம் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டத்தல் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், வேட்பாளர் பட்டியல் தொடர்பாக ராகுல் காந்தி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். வேட்பாளர்களை இறுதி செய்வதில் கட்சி தொடர் சவால்களை சந்தித்து வருவது பற்றியும், உள்கட்சி கருத்து வேறுபாடுகளை கட்சி தலைவர்கள் சரிசெய்யாததால் அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

அதோடு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் தொடர்பாக தலைவர்களிடையே இருக்கும் இணக்கமற்ற சூழலை கண்டித்துள்ளார். அதோடு தமிழக சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பாக ராகுல் காந்தி தயாரித்த பட்டியலுக்கும், மூத்த தலைவர்கள் அடங்கிய தமிழ்நாடு காங்கிரஸ் அளித்த பட்டியலுக்கும் இடையே வேறுபாடுகள் இருந்துள்ளது. இதனால் வேட்பாளர்களின் பரிந்துரையை ராகுல் காந்தி ஏற்காமல் மீண்டும் புதிய பட்டியலை தயார் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

அதேபோன்று சில தொகுதிகளுக்கு, அகில இந்திய காங்கிரஸ் தலைமை பரிந்துரைத்த வேட்பாளர்களை ஏற்க மாநில தலைமை தயங்கி உள்ளது. இதனால் ராகுல் காந்தி கடும் அதிருப்தியடைந்துள்ளார். இதற்கு முக்கிய காரணம், 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்தது தான் காரணமாக இருந்துள்ளது. அதன்படி விளவங்கோடு, கிருஷ்ணகிரி, சிங்காநல்லூர், பென்னாகரம், மேலூர் உள்ளிட்ட தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தலைவர்கள் இடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால் குழப்பம் நீடித்துள்ளது. இதனால் தான் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதில் காலதாமதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Chennai ,All India Congress ,Congress ,Tamil Nadu Legislative Council ,Malur ,
× RELATED அந்த விரக்தியில்தான் என் மகன்...