×

கே.வி.குப்பம் அருகே பரபரப்பு மாடு விடும் விழாவில் பார்வையாளர்கள் மீது போலீஸ் தடியடி காளைகள் முட்டியதில் 10 பேர் காயம்

கே.வி.குப்பம், பிப்.19: ேக.வி.குப்பம் அருகே நடந்த மாடுவிடும் விழாவில் பார்வையாளர்கள் போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் காளைகள் முட்டியதில் 10 பேர் காயம் அடைந்தனர்.வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் மேல் காவனூர் காமாட்சியம்மன் பேட்டையில் நேற்று மாடு விடும் திருவிழா நடைபெற்றது. இதில், பேரணாபட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம், காட்பாடி, வேலூர், அணைக்கட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இதில் குறிப்பிட்ட தூரத்தை குறைந்த நேரத்தில் கடந்த காளைகளுக்கு முதல் மூன்று பரிசுகளாக இருச்சக்கர வாகனங்கள் உள்ளிட்ட 35 பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவை காண ஆயிரக்கணக்கான இளைஞர்கள் காலை 8 மணியளவில் இருந்தே வர தொடங்கினர். முன்னதாக தீயணைப்பு துறையினர், கால்நடை மருத்துவர்கள் ஆகியோர் தயாரான நிலையில் இருந்தனர். தொடர்ந்து, விழாவை ஆர்டிஓ ஷேக் மன்சூர் தொடங்கி வைத்தார். தாசில்தார் ராஜேஸ்வரி தலைமையிலான வருவாய் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். டிஎஸ்பி தரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் முரளிதரன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

விழாவில், தடுப்புகள் கட்டப்பட்டு இருந்தும் இளைஞர்கள் சிலர் தடுப்பை தாண்டி காளைகள் மீது கை போட்டனர். இதனால் சிலருக்கு பலத்த காயமும், சிலர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இதனால் ஆத்திரமடைந்த விழா குழுவினர் போலீசாரிடம் இளைஞர்களை தடுக்கும் மாறு அறிவுறுத்தினர். உடனே தடுப்பை மீறி நின்ற சில இளைஞர்கள் மீது போலீசார் ேலசான தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இதனை தொடர்ந்து அந்த இளைஞர்கள் தடுப்புகளுக்குள் சென்று விழாவை கண்டுகளித்தனர். இதில், காளைகள் முட்டியதில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கு முகாமிட்டு இருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். மேலும், படுகாயம் அடைந்த ஒருவரை மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags : spectators ,cow slaughtering ceremony ,KV Kuppam ,
× RELATED ரம்ஜான் நெருங்கும் நிலையில்...